எதிர்வரும் 11 ஆம் திகதி மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் தவிர்ந்த ஏனைய இடங்களில் பாடசாலைகளை மீள திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதனை கருத்திற்கொண்டு, பாடசாலை மாணவர்களுக்காக “சிசு செரிய” பஸ் சேவை உள்ளிட்ட போக்குவரத்து வசதிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.

கடந்த காலங்களில் சுமார் 800 சிசு செரிய பஸ் சேவைகள் முன்னெடுக்கப்பட்டதாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்தார்.

இந்த நிலையில், சிசு செரிய பஸ் சேவைகளை மேலும் அதிகரிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

டிப்போ முகாமையாளர்கள் மற்றும் பாடசாலை அதிபர்களூடாக இணைந்து இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவதாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க குறிப்பிட்டார்.

சிசு செரிய பஸ் சேவையை அதிகரிப்பதற்கான தேவை, ஏதேனுமொரு பாடசாலைக்கு காணப்படுமாயின் அது தொடர்பில் பிரதேசத்திற்கு பொறுப்பான டிப்போ முகாமையாளர் அல்லது பிரதான அலுவலகத்திற்கு தெரியப்படுத்துமாறும் அவர் கோரிக்கை விடுத்தார்.