அரசாங்கத்தின் நடவடிக்கைகள் இலங்கையில் இன ஐக்கியத்தை ஏற்படுத்தாது என புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த நினைவுத்தூபி இடித்தழிக்கப்பட்டது தொடர்பில் தனது கண்டனங்களை தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார் .

அவர் மேலும் தெரிவிக்கையில்,

யாழ்ப்பாண பல்கலைகழகத்தில் அமைக்கப்பட்ட நினைவுத்தூபி மக்களை நினைவுகூர அமைக்கப்பட்டது. இதை இரவோடிரவாக அரச இயந்திரம் இடித்தழித்துள்ளது. இது மிக மோசமான நடவடிக்கை.

தமிழ் மக்களின் ஆன்மாவை உலுக்கும் இந்த நடவடிக்கைக்கு எமது கடுமையான கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

முன்னைய அரசுகளின் இதுபோன்ற நடவடிக்கைகள்தான் தமிழ் மக்களை தவிர்க்கவியலாமல் நீண்ட போராட்டத்திற்குள் தள்ளின. இந்த அரசும் தமிழ் மக்களை கொந்தளிக்க வைக்கும் நடவடிக்கைகளையே தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.

இப்படியான அடக்குமுறை செயற்பாடுகளை அரசு தொடருமானால், இந்த நாட்டில் நிரந்தர அமைதியை என்றுமே காண முடியாமல் போய்விடும் என்றார்.