கொரோனா வைரஸ் தொற்றால் காத்தான்குடியில் மற்றுமொரு மரணம் பதிவாகியுள்ளது.

காத்தான்குடி 4ஆம் குறிஞ்சியை சேர்ந்த 64 வயதுடைய ஒருவர், கொரோனா வைரஸ் தொற்றால் பதிக்கப்பட்டு, ஹோமாகம வைத்திசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று (09) மரணமடைந்துள்ளார். இவர் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டவர் எனத் தெரியவருகிறது.

கொரோனா வைரஸ் தொற்றால் காத்தான்குடியில் பதிவான இரண்டாவது மரணம் இதுவாகும். மட்டக்களப்பு மாவட்டத்தில் 03ஆவது மரணமாகும். அதேவேளை, கிழக்கு மாகாணத்தில் கொரோனா தொற்று மரண எண்ணிக்கை 10ஆக பதிவாகியுள்ளது.

முன்னதாக, அம்பாறை, உகன பகுதியைச் சேர்ந்த 46 வயது பெண்ணொருவர் தொற்றாளர் என அடையாளம் காணப்பட்டு, சிறுநீரக சிகிச்சைக்கு என கொழும்பு வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு, அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தமை கிழக்கின் 9ஆவது மரணமாக இருந்தது.

இதேவேளை, காத்தான்குடியில் வீதி வீதியாக நடமாடும் வாகனத்தின் மூலம் நேற்று (09) 96 பேருக்கு செய்யப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதாக காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஏ.எல்.எம்.நபீல் தெரிவித்தார்.