நேற்றைய தினம் (11) முதல் இன்று (12) காலை வரையில் நாட்டில் புதிதாக 569 பேர் கொரோனா வைரஸ் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளதாக COVID – 19 தொற்று பரவலை தடுக்கும் செயலணி தெரிவித்துள்ளது.

அவர்களுள் ஒருவர் வௌிநாட்டிலிருந்து தாயகம் திரும்பியவராவார்.

ஏனைய 568 பேரில் களுத்துறை மாவட்டத்திலேயே அதிகளவான நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

களுத்துறை மாவட்டத்தில் 110 பேரும் கொழும்பு மாவட்டத்தில் 37 பேரும் கம்பஹா மாவட்டத்தில் 88 பேரும் அம்பாறை மாவட்டத்தில் இருவரும் மட்டக்களப்பு மாவட்டத்தில் இருவரும் நுவரெலியா மாவட்டத்தில் 09 நபர்களும் முல்லைத்தீவு மாவட்டத்தில் இருவரும் வவுனியா மாவட்டத்தில் 32 நபர்களும் புத்தளம் மாவட்டத்தில் 12 பேரும் யாழ். மாவட்டத்தில் இருவரும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கொழும்பு மாவட்டத்தின் நாரஹேன்பிட்ட பகுதியில் 13 பேர், வௌ்ளவத்தை பகுதியில் 2 நபர்கள், தெமட்டகொடை பிரதேசத்தில் ஒருவர், மருதானை பகுதியில் இருவர் மற்றும் மட்டக்குளி பகுதியில் இருவர் அடங்கலாக கொழும்பு மாவட்டத்தில் 37 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கம்பஹா மாவட்டத்தின் வத்தளை பிரதேசத்தில் 15 பேரும் நீர்கொழும்பு பகுதியில் ஐவரும் களனியில் 12 பேரும் புதிதாக தொற்றுடன் இனங்காணப்பட்டுள்ளனர்.

நாட்டில் இன்று காலை வரையில் 48,952 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள அதேநேரம், 42,091 பேர் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.

இதனிடையே, இராஜகிரிய, மட்டக்குளி, கொழும்பு – 12, கொழும்பு – 14, பண்டாரகம, களுத்துறை தெற்கு மற்றும் காத்தான்குடி ஆகிய பகுதிகளை சேர்ந்த 7 பேர் மற்றும் வெலிக்கடை சிறைக்கைதி ஒருவர் அடங்கலாக 8 கொரோனா மரணங்கள் நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளன.

நாட்டில் கொரோனா தொற்றினால் இதுவரை 240 பேர் உயிரிழந்துள்ளனர்.

நேற்றைய தினத்தில் 13,224 PCR பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இந்தநிலையில் ஐக்கிய அரபு இராச்சியம், மாலைதீவு, கட்டார் மற்றும் சீனா ஆகிய நாடுகளிலிலிருந்து மேலும் 434 இலங்கைப் பிரஜைகள் இன்று காலை நாடு திரும்பியுள்ளனர்.