பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் PCR பரிசோதனையை மேற்கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் குறித்து நேற்று (11) மாலை அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற படைக்கள சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.

நாளைய தினம் (13) மற்றும் எதிர்வரும் 15 ஆம் திகதி ஆகிய தினங்களில் பாராளுமன்ற கட்டட தொகுதியில் PCR பரிசோதனையை மேற்கொள்வதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர்களின் அலுவலக உத்தியோகத்தர்கள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு இந்த இரு தினங்களும் PCR பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளதாக படைக்கள சேவிதர் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர்கள் 25 பேர் தற்போது சுயதனிமைப்படுத்தலில் ஈடுபட்டுள்ளனர்.

தற்போது ஏற்பட்டுள்ள இந்த நிலைமை குறித்து நாளை இடம்பெறவுள்ள பாராளுமன்ற கட்சித் தலைவர்களுக்கு இடையிலான கலந்துரையாடலின் போது கவனம் செலுத்தவுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், பாராளுமன்ற நடவடிக்கைகள் உரிய முறையில் முன்னெடுக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.

இதில் எவ்வித மாற்றங்களும் இல்லை என அவர் குறிப்பிட்டார்.

நீர் வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணாயக்கார, பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் மற்றும் இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர ஆகியோருக்கு COVID – 19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது