வவுனியா பாவற்குளத்தின் வான் கதவுகள் மூன்றும் ஒன்றரை அடி திறக்கப்பட்டுள்ளதாகவும், அதன் கீழ் உள்ள மக்களை அவதானமாக இருக்குமாறும் மத்திய நீர்ப்பாசன திணைக்களத்தின் பிராந்திய நீர்ப்பாசன பொறியியலாளர் கெ. இமாசலன் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் தொடரும் மழை காரணமாக மாவட்டத்தில் உள்ள குளங்களின் நீர்மட்டம் அதிகரித்துள்ளது. அந்தவகையில் மத்திய நீர்ப்பாசனத் திணைக்களத்தின் கீழ் காணப்படும் பாவற்குளத்தின் நீர்மட்டம் 19 அடி 6 அங்குலமாகவும், முகத்தான்குளம் 12 அடி 1 அங்குலமாகவும், ஈரப்பெரியகுளம் 15 அடி 8 அங்குலமாகவும், மருதமடு குளம் 12 அடி 6 அங்குலமாகவும், இராசேந்திரகுளம் 12 அடி 8 அங்குலமாகவும் உயர்வடைந்துள்ளது. அத்துடன், கல்லாறு அணைக்கட்டின் நீர்மட்டம் 9 அடி 9 அங்குலமாகவும் உயர்வடைந்துள்ளது.

இதில், வவுனியா மாவட்டத்தின் பெரிய குளமாகிய பாவற்குளம் அதன் கொள்ளவான 19.4 அடியைக் கடந்துள்ளமையால் அதன் மூன்று வான் கதவுகளும் ஒன்றரை அடி திறக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பாவற்குளத்தின் நீர் வழிந்தோடும் பகுதிகளிலும், அதன் தாழ் நிலப் பகுதிகளிலும் வாழும் மக்கள் அவதானத்துடன் இருக்கவும்.

மேலும், மத்திய நீர்பாசன திணைக்களத்தின் கீழான முகத்தான்குளம், இராசேந்திரகுளம், ஈரப்பெரியகுளம், மருதமடு குளம் என்பனவும், கல்லாறு அணைக்கட்டும் அதன் கொள்ளளவைத் தாண்டி நீர் வரத்து அதிகரித்துள்ளமையால், தற்போது அவற்றின் நீர்மட்டம் அதிகரித்து வான் பாய்ந்து வருவதானால் மக்கள் அவதானமாக இருக்குமாறும் மத்திய நீர்ப்பாசன திணைக்களத்தின் பிராந்திய நீர்ப்பாசன பொறியலாளர் மேலும் தெரிவித்துள்ளார்.