மட்டக்களப்பு – களுவாஞ்சிடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியகல்லாறு பகுதியில் சுதாகரன் அஸ்வினி என்ற 11 வயதுச் சிறுமியின் மரணம் தொடர்பில் முறையான விசாரணை நடத்தக்கோரியும் சம்பந்தப்பட்டவர்களை கைதுசெய்யுமாறு வலியுறுத்தியும்,

பெரியகல்லாறு பிரதான வீதியில் நேற்று (13) மாலை  கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியில், கொட்டும் மழையின் மத்தியிலும் வீதியை மறித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது சிறுமியின் மரணம் கொலையெனவும் சிறுமி கடுமையான முறையில் சித்திரவதை செய்யப்பட்டுள்ளாரெனவும் அவரது மரணத்துக்கு நியாயம் வேண்டும் எனவும் அவர்கள் கோசமெழுப்பினர்.

இதனையடுத்து போராட்ட இடத்துக்கு வந்த களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, பொதுமக்களுடன் கலந்துரையாடியதுடன், குறித்த சம்பவத்துடன் தொடர்புடையவர்களை கைதுசெய்வதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாகவும் 48 மணித்தியாலத்துக்குள் அவர்களை கைதுசெய்வோம் எனவும் வழங்கிய உறுதிமொழியையடுத்து, போராட்டம் கைவிடப்பட்டது.