கொரோனா தொற்றினால் இலங்கையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 247 ஆக அதிகரித்துள்ளது. நேற்று (13) மூன்று மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டன.

பத்தரமுல்லை, கொழும்பு 15, கொழும்பு 10 ஆகிய பகுதிகளில் உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.

பத்தரமுல்லை பிரதேசத்தை சேர்ந்த, 66 வயதான பெண்ணொருவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் COVID-19 தொற்றாளராக அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து, ஹோமாகம ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கு உயிரிழந்துள்ளார். COVID-19 தொற்று காரணமாக உக்கிரமடைந்த இருதய நோயால் அவர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கொழும்பு 15 பிரதேசத்தை சேர்ந்த 81 வயதான ஆணொருவர், கொழும்பு தேசிய தொற்றுநோய் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார். COVID-19 நியூமோனியா நிலை மற்றும் சுவாச தொகுதியில் ஏற்பட்ட உக்கிர தொற்றினால் அவர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கொழும்பு 10-ஐ சேர்ந்த 89 வயதான ஆண் ஒருவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மரணமடைந்துள்ளார். COVID-19 நியூமோனியா நிலையே அவரது மரணத்திற்கான காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, நேற்று 687 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கமைய, நாட்டில் இதுவரை 50,229 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவர்களில் 6,715 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா தொற்றுக்குள்ளானோரில் 43,267 பேர் இதுவரை குணமடைந்துள்ளனர்.

இந்நிலையில், ஒக்டோபர் மாதத்தின் பின்னர் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.

நாட்டில் பதிவான கொரோனா நோயாளர்களில் 45 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கடந்த ஒக்டோபர் மாதத்தில் பதிவாகியுள்ளதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

கடந்த 24 மணித்தியாலங்களில் 14 ,329 PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.