பிரதமரின் மேலதிக செயலாளரும் ஆளும் கட்சியின் பிரதான ஒருங்கிணைப்பாளரின் செயலாளரும் சட்டத்தரணியுமான சமிந்த குலரத்னவுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

அதையடுத்து,   பாராளுமன்றத்திலுள்ள அரசாங்க முதற்கோலாசான் அலுவலகம், உறுப்பினர்களுக்கான சேவை அலுவலகம் என்பன நேற்று முன்தினம் (13) முதல் மூடப்பட்டன.
இதனால், சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில், பாராளுமன்ற கட்டட வளாகத்தில் நேற்று முன்தினம் (13) நடைபெறவிருந்த கட்சித் தலைவர்களின் கூட்டமும் 18ஆம் திகதிக்கு பிற்போடப்பட்டுள்ளது என அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

குறித்த செயலாளருக்கு, கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து, அந்த அலுவலகத்தின் சகல பணியாளர்களும் தனிமைப்படுத்தப்பட்டு, பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

தற்போதைய நிலைமை காரணமாக, வெளிப்புற பார்வையாளர்கள் அத்தியாவசிய காரணத்துக்காக அன்றி, வேறெந்த விடயங்களுக்காகவும் பாராளுமன்றக் கட்டடத் தொகுதிக்கு வருவதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு படைக்கல சேவிதர் நரேந்திர பெர்ணான்டோ வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதேவேளை, தொற்றுக்குள்ளான பிரதமரின் மேலதிக செயலாளர், சிகிச்சைக்காக கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, பாராளுமன்றம் 19ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அன்றைய  தினம், பாராளுமன்றத்தைக் கட்டாயமாகக் கூட்ட வேண்டும். 19ஆம் திகதி பாராளுமன்றம் கூடி, குறித்த வாரத்தின் ஏனைய அமர்வுகள் தொடர்பில்,  ஆலோசிக்கப்பட்டு, இறுதித் தீர்மானம் எட்டப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டாம் வாரத்துக்கான பாராளுமன்ற அமர்வை, 19ஆம் திகதியன்று ஆரம்பித்து, 22 ஆம் திகதி வரையிலும் நடத்துவதற்கு முன்னதாகத் தீர்மானிக்கப்பட்டு உள்ளமை குறிப்பிடத்தக்கது.