வடக்கு கடற்பரப்பில் இலங்கை கடற்படை படகில் மோதி விபத்திற்குள்ளான இந்திய மீனவர் படகில் பயணித்த இருவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

மீட்கப்பட்ட சடலங்களை கரைக்கு எடுத்து வருவதாக கடற்படை பேச்சாளர் கெப்டன் இந்திக டி சில்வா தெரிவித்தார்.

இந்த இரு சடலங்களையும் பிரேத பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு அனுப்பவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கடற்படை பேச்சாளர் குறிப்பிட்டார்.

விபத்திற்குள்ளான படகில் 04 பேர் பயணித்திருந்ததாக இந்திய அதிகாரிகள் தங்களுக்கு அறிவித்ததாகவும் கடற்படை பேச்சாளர் கூறினார்.

காணாமற்போயுள்ள ஏனைய இருவரையும் தேடும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கடற்படை பேச்சாளர் கெப்டன் இந்திக டி சில்வா தெரிவித்தார்.

நெடுந்தீவிற்கு வட மேற்கே கடலில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட போது, இந்திய மீனவர்களின் படகு இலங்கை கடற்படையினரால் அவதானிக்கப்பட்டுள்ளது.

இந்திய மீனவர்களுடனான படகு இலங்கை கடற்படையின் படகை ஆக்ரோஷமாக மோதித் தள்விட்டு செல்ல முனைந்த போது அந்தப் படகு கவிழ்ந்ததாகவும் காணாமல் போன இந்திய மீனவர்களை தேடும் பணியில் இலங்கை கடற்படையின் விசேட பிரிவு ஈடுபட்டுள்ளதாகவும் இலங்கை கடற்படை அறிவித்திருந்தது.

இந்நிலையில், மீனவர்கள் இருவரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

இதேவேளை, ராமேஸ்வரம் மீனவர்கள் தமது விசைப் படகுகளில் கறுப்புக்கொடி கட்டி இந்த சம்பவத்திற்கு அதிருப்தியை வெளியிட்டுள்ளனர்.

கச்சத்தீவில் மீன்பிடிப்பதற்கான அனுமதியை தமக்கு பெற்றுத்தர இந்திய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராமேஸ்வரம் மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.