வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக இந்த வருடம் செல்லும் முதலாவது குழு தென் கொரியாவுக்கு புறப்பட்டுள்ளது.

இந்த குழுவில் 20 தொழிலாளர்கள் உள்ளடங்குகின்றனர். இவர்கள் நாட்டிலிருந்து புறப்படுவதற்கு 48 மணித்தியாலங்களுக்கு முன்னர் பிசீஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுனர்.

தென் கொரியாவில் 14 நாட்கள் தனிமைப்படுத்தலின் பின்னர் அவர்களை சேவை நிலையங்களுக்கு அனுப்பி வைக்க அந்நாட்டு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

தென் கொரியாவுக்குள் பிரவேசிக்கும் அனைத்து வெளிநாட்டு பணியாளர்களும் தமது கையடக்க தொலைபேசியில் அந்நாட்டு சுகாதார பிரிவு அறிமுகப்படுத்தியுள்ள செயலியை சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

தனிமைப்படுத்தல் காலப்பகுதியில் தமது விபரங்களை அதில் அடிக்கடி தெளிவுபடுத்த வேண்டும்.

தென்கொரியாவின் புதிய விதிமுறைகளின்படி வெளிநாட்டு தொழிலாளர்கள் ஜனவரி 1 முதல் நடைமுறைக்கு வரும் செல்லுபடியான பிசிஆர் பரிசோதனை அறிக்கையை கட்டாயமாக சமர்பிக்க வேண்டும்.

இந்த பிசிஆர் பரிசோதனை விமானப் பயணத்திற்கு 72 மணி நேரத்திற்கு முன்னர் பெற்றிருத்தல் வேண்டும் என்பதுடன், பிசிஆர் பரிசோதனை அறிக்கைகள் இல்லாத வெளிநாட்டு தொழிலாளர்கள் கொரியாவிலிருந்து வெளியேற்றப்படுவார்கள் என்றும் அந் நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக புறப்பட்டுச் செல்லும் பணியாளர்கள் மற்றும் சுற்றுலா நிமித்தம் வருவோருக்காக கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட இடமொன்று ஒதுக்கப்பட்டுள்ளது. இது நேற்று முதல் இயங்கி வருகிறது. இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகமும் வரையறுக்கப்பட்ட விமான நிலைய மற்றும் விமான சேவைகள் நிறுவனமும் இணைந்து இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுத்துள்ளன.

அங்கு அமைக்கப்பட்டுள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் கருமபீடத்தில் தேவையான விளக்கங்களையும் பரிசோதனைகளையும் பெற்றுகொள்ள முடியும்.

அத்துடன் ஹொங்கொங் நாட்டிற்கு வருகின்ற வீட்டுப் பணிப்பெண்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு கட்டாய தனிமைப்படுத்தல் உட்பட பல நடவடிக்கைகளை ஹொங்கொங் அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.

மேலும் எதிர்வரும் மார்ச் 31 அல்லது அதற்கு முன்னர் வேலை ஒப்பந்தக் காலம் முடிவடையும் வெளிநாட்டுப் பணிப்பெண்கள் வேலை ஒப்பந்தத்தை புதுப்பிப்பதற்கான செல்லுபடியாகும் காலம் மேலும் மூன்று மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

(அரசாங்க தகவல் திணைக்களம்)