இலங்கையில்  மோசமடைந்து வருகின்ற மனித உரிமை நிலைமையைக் கண்காணிக்கவும் கடந்த கால மனித உரிமை மீறல்களுக்கான பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதற்கும் புதிதாக ஒரு தீர்மானத்தை ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை நிறைவேற்ற வேண்டும் என மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது.

இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் வௌியிட்டுள்ள அறிக்கை தொடர்பில், மனித உரிமைகள் கண்காணிப்பகம் நேற்று (29) வௌியிட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் எதிர்வரும் கூட்டத்தொடரில் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் பரிந்துரைகளுக்கு அமைவாக செயற்பட வேண்டும் எனவும் அந்த அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

இலங்கையின் பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கத்தை உறுதிப்படுத்தும் வகையில், 2015 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு இணை அனுசரணை வழங்குவதிலிருந்து இலங்கை அரசாங்கம் வௌியேறியதுடன், மனித உரிமைகளை உறுதிப்படுத்துவதிலும் புறக்கணிப்பை வௌிப்படுத்தியுள்ளதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

2009 ஆம் ஆண்டு முடிவிற்குக் கொண்டுவரப்பட்ட யுத்தத்தின்போது, இரண்டு தரப்பினரும் பாரிய குற்றங்களை இழைத்துள்ளதாக அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

இவை போர்க்குற்றங்களாகவும் மனிதாபிமானத்திற்கு எதிரான குற்றங்களாகவும் ஐ.நா-வின் விசாரணையாளர்களினால் உறுதிப்படுத்தப்பட்டதாகவும் மனித உரிமை கண்காணிப்பகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை தொடர்பிலான அறிக்கையை ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் மிச்சேல் பெச்சலட் அண்மையில் வௌியிட்டிருந்தார்.

இலங்கையில் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட பாதுகாப்பு தரப்பினர் மற்றும் அரச ஊழியர்களை பதவிகளில் இருந்து நீக்குமாறு அவர் பரிந்துரைத்துள்ளார்.

அனைத்து மனித உரிமை மீறல்கள் தொடர்பிலும் உடனடியாக, விரிவான பக்கசார்பற்ற விசாரணைகளை முன்வைக்குமாறு தனது வருடாந்த அறிக்கையில் மிச்செல் பச்சலட் வலியுறுத்தியுள்ளார்.