நாட்டில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 339 ஆக அதிகரித்துள்ளது. நேற்றைய தினம் 7 கொரோனா மரணங்கள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் உறுதிப்படுத்தப்பட்டன.

மக்கொன, வேஉட, கட்டுகஸ்தொட்ட, ஹெட்டிப்பொல, பியகம, திக்வெல்ல, நுவரெலியா ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்களே தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.

இதனிடையே, நாட்டில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 67,115 ஆக அதிகரித்துள்ளது.

நேற்றைய தினம் 704 பேர் தொற்றுடன் அடையாளங்காணப்பட்டனர்.

இவர்கள் அனைவரும் பேலியகொடை கொரோனா கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதுவரை தொற்றுடன் அடையாளங்காணப்பட்டோரில் 60,567 பேர் குணமடைந்துள்ளனர்.

6 ,209 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நாட்டில் இதுவரை ஒரு இலட்சத்து 50 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன.

முற்பதிவு செய்யப்பட்டுள்ள தடுப்பூசிகள் கிடைத்ததும், நாளொன்றிற்கு 5 இலட்சம் தடுப்பூசிகளை ஏற்றுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக COVID -19 ஒழிப்பு மற்றும் ஆரம்ப சுகாதார சேவை அமைச்சின் செயலாளர் விசேட வைத்திய நிபுணர் அமல் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் இரண்டு மாதங்களில் மேலும் 3 மில்லியன் தடுப்பூசிகளை நாட்டிற்கு கொண்டு வருவதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் விசேட வைத்திய நிபுணர் அமல் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

சுகாதார ஊழியர்கள், முப்படையினர், 60 வயதிற்கு மேற்பட்ட சக்கரை நோய், உயர் குருதி அழுத்தம், இருதய நோய் உள்ளிட்ட நோயாளர்களுக்கு முன்னுரிமை வழங்கி, தடுப்பூசிகள் ஏற்றப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.