வவுனியா – ஓமந்தை,  நவ்வி பகுதியில், இன்று (09) காலை, 7 வயது சிறுவன் ஒருவன், கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 

வவுனியா நவ்வி ஆரம்ப பாடசாலையில் கல்வி கற்ற   ப.அபிசாந் என்ற சிறுவனே, இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த சிறுவன், நேற்று  (08) மதியம் 2 மணியளவில், வீட்டில் இருந்து சக மாணவனின் வீட்டுக்குச் சென்று படித்து விட்டு வருவதாக தெரிவித்து சென்றுள்ளார்.

எனினும், நீண்ட நேரமாகியும் சிறுவன் வீடு திரும்பாத்தை அடுத்து, பெற்றோரால்
ஓமந்தை பொலிஸ் நிலையத்தில், நேற்றுக் காலை முறைப்பாடு செய்யப்பட்டது.

இதையடுத்து,  குறித்த சிறுவன் படிப்பதற்காகச் சென்ற சக மாணவனின் வீட்டுக்குச் சென்று, விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், அவ்வீட்டுக்கு அருகில் இருந்து, காணாமல் போன சிறுவனின் புத்தகபையை மீட்டனர்.

 இதை தொடர்ந்து, மோப்ப நாய் சகிதம் மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் அடிப்படையில், அவ்வீட்டில் காணப்பட்ட கிணற்றில் இருந்து குறித்த சிறுவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை, ஓமந்தை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.