கொழும்பு  ஷங்ரி-லா ஹோட்டலில் தற்கொலை குண்டுத்தாக்குதல் நடத்திய சஹரான் ஹாசிமின் மனைவியான அப்துல் காதர் பாத்திமா ஹாதியா உள்ளிட்ட 6 சந்தேகநபர்களும் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களை எதிர்வரும் 03 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் பிரியந்த லியனகே இன்று உத்தரவிட்டுள்ளார்.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் சந்தேகநபர்கள் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி கொழும்பு கிங்ஸ்பெரி ஹோட்டலில் தற்கொலை குண்டுத்தாக்குதல் நடத்திய மொஹமட் முபாரக் என்பவரின் மனைவியான ஆயிசா சித்திக் என்பவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சந்தேகநபர்கள் நீதிமன்றத்திற்கு அழைத்துச்செல்லப்படாமல், ஸ்கைப் தொழில்நுட்பத்தினூடாக நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இந்த சந்தேகநபர்கள் தொடர்பில் மேற்கொள்ளப்படும் விசாரணைகளை துரிதப்படுத்தி, அதன் முன்னேற்ற அறிக்கையை மன்றுக்கு சமர்ப்பிக்குமாறு இதன்போது குற்றப்புலனாய்வு திணைக்களத்தினருக்கு நீதவான் உத்தரவிட்டார்.