கிழக்கு மாகாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 2,600ஐ தாண்டியுள்ளது. இதன்படி, இன்று (10) தொற்றாளர்களின் எண்ணிக்கை 2,633ஆக பதிவாகியுள்ளது. அதேவேளை, கல்முனைப் பிராந்தியத்தில் தொற்றாளர்களின் எண்ணிக்கை 1,277ஆக பதிவாகியுள்ளது.

இதுவரை கிழக்கு மாகாணத்தில் உள்ள 08 கொரோனா சிகிச்சை வைத்தியசாலைகளில் 3,940 தொற்றாளர்கள் அனுமதிக்கப்பட்டிருந்தனர். அவர்களில் 3,636 பேர் குணமாகி வீடு சென்றுள்ளனர். தற்போது 286 பேர் மாத்திரமே 08 வைத்தியசாலைகளிலும் உள்ளனர். அங்கு 560 கட்டில்கள் காலியாகவுள்ளன.

இது இவ்வாறிருக்க இதுவரை  27,489 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ள அதேவேளை, 62,580 பேர் அன்ரிஜன் மற்றும் பிசிஆர் சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை, இதுவரை கிழக்கில் சம்மாந்துறை, ஒலுவில், சாய்ந்தமருது, அட்டாளைச்சேனை, வவுணதீவு, காத்தான்குடி, நாவிதன்வெளி, ஆலையடிவேம்பு, உகனை, காத்தான்குடி மற்றும் மட்டக்களப்பிலுமாக மொத்தம் 16 கொரோனா மரணங்கள் சம்பவித்திருக்கின்றன. அதிகூடிய 04 மரணங்கள் சாய்ந்தமருதில் சம்பவித்துள்ளன.

கல்முனைப் பிராந்தியத்தில் 08 பேரும் மட்டக்களப்பு மாவட்டத்தில் 06 பேரும் அம்பாறைப் பிராந்தியத்தில் இருவருமாக இந்த 16 மரணங்கள் சம்பவித்திருக்கின்றன.