இலங்கையில் உரிமைகள் மீறப்பட்டுள்ளதா என்பது தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் ஆணையாளராக யோகேஸ்வரி பற்குணராஜா நியமிக்கப்பட்டுள்ளார்.

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் உறுப்பினரும் யாழ். மாநகர சபையின் முன்னாள் மேயருமான யோகேஸ்வரி பற்குணராஜா இந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளமைக்கான விசேட வர்த்தமானி நேற்று (12) வௌியிடப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் 2015 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் நிறைவேற்றப்பட்ட இலங்கையின் நல்லிணக்கம் , பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமை விடயத்தின் முன்னேற்றம் ஆகியன தொடர்பான 30/1 பிரேரணை மற்றும் அதனுடன் தொடர்புடை மேலும் இரண்டு பிரேரணைகளுக்கு அப்போதைய அரசாங்கம் அனுசரனை வழங்கியது.

எனினும், இணை அனுசரணையிலிருந்து விலகுவதாக தற்போதைய அரசாங்கம் அறிவித்தது.

மனித உரிமைகள், மானிட சட்டம் மீறப்பட்டமை தொடர்பில் ஆணைக்குழுக்களும் ஏனைய குழுக்களும் விசாரணைகளை மேற்கொண்டு பல பரிந்துரைகளையும் அறிக்கைகளையும் சமர்ப்பித்துள்ளன.

தற்போது சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கைகள், பரிந்துரைகள் தொடர்பில் விசாரணை மற்றும் ஆய்வுகளை மேற்கொண்டு எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை சிபாரிசு செய்யுமாறு கடந்த மாதம் 22 ஆம் திகதி மூவரடங்கிய புதிய ஆணைக்குழுவொன்றை ஜனாதிபதி நியமித்தார்.

உயர் நீதிமன்ற நீதியரசர் ஏ.எச்.எம்.டி.நவாஸ் தலைமையில் இந்த ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது.

ஓய்வுபெற்ற பொலிஸ் மா அதிபர் சந்திரா பெர்னாண்டோ மற்றும் ஓய்வுபெற்ற மாவட்ட செயலாளர் நிமல் அபேசிறி ஆகியோர் இந்தக் குழுவின் ஏனைய உறுப்பினர்களாவர்.

இந்நிலையிலேயே ஆணைக்குழுவின் ஆணையாளராக யோகேஸ்வரி பற்குணராஜா நியமிக்கப்பட்டுள்ளார்.

யோகேஸ்வரி பற்குணராஜாவின் விவேகம், திறமை மற்றும் பற்றுறுதி என்பவற்றின் மீது மிகுந்த நம்பிக்கை கொண்டு ஜனாதிபதியினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாகவும் நேற்று வௌியிடப்பட்டுள்ள வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.