இலங்கையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு 13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இந்தியா வலியுறுத்தியுள்ளது.

நாட்டின் இறையாண்மையை பாதுகாப்பதற்கு அரசாங்கம் முன்னின்று செயற்பட வேண்டும் எனவும் இந்தியா சுட்டிக்காட்டியுள்ளது.

இலங்கையில் தமிழ் மக்களின் உரிமைகளை பாதுகாப்பதற்காக அரசாங்கம் உரிய செயற்பாடுகளை எடுக்க வேண்டும் என தற்போது நடைபெற்று வரும் மனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது கூட்டத்தொடரின் போது ஐக்கிய நாடுகளுக்கான இந்தியாவின் வதிவிடப் பிரதிநிதி இந்திரா மணி பாண்டே தெரிவித்துள்ளார்.

2015 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட உறுதி மொழிகளின் அடிப்படையில் , இலங்கை அரசாங்கம் உண்மைகளைக் கண்டறியும் விடயத்தையும் பொறுப்புக்கூறல் விடயத்தையும் சரியாக நிறைவேற்றவில்லை என ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் மிச்சேல் பெச்சலட் நேற்று தனது உரையில் கூறினார்.

இந்த விடயம் தொடர்பில் பல சர்வதேச நாடுகள் தமது கருத்துக்களை மனித உரிமைகள் பேரவை கூட்டத்தொடரில் தெரிவித்துள்ளன.

சீனா, பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ், ரஷ்யா உள்ளிட்ட சில நாடுகள் இலங்கைக்கு ஆதரவாக கருத்துக்களை வௌியிட்டுள்ளதுடன், பிரித்தானியா, கனடா, அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகள் இலங்கையின் செயற்பாடுகளைக் கண்டித்துள்ளன.

சர்வதேச மன்னிப்புச் சபை மற்றும் சர்வதேச நாணய நிதியம் என்பனவும் இலங்கையின் கடந்தகால மற்றும் தற்போதைய சில செயற்பாடுகளை மனித உரிமைகள் கூட்டத்தொடரின் போது கண்டித்துள்ளன.