கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்வதற்கான இரண்டு இடங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளன என்று, கொரோனா வைரஸ் தடுப்பு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்வது தொடர்பான சுகாதார வழிமுறைகள் அடங்கிய சுற்றுநிரூபம், இன்னும் 48 மணிநேரங்களுக்குள் வெளியிடப்படும் என்றும், மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்வதற்கு, நிலக்கீழ் நீர் மட்டம் மிகவும் ஆழத்தில் உள்ள பிரதேசங்களாக அடையாளம் காணப்பட்ட மன்னார், காத்தான்குடி போன்ற இரண்டு பிரதேசங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளன என்றும் மேற்படி சுற்றுநிரூபம் வெளியிடப்பட்டதும், அப்பிரதேசங்களில் நல்லடக்கப் பணிகள் ஆரம்பிக்கப்படும் என்றும், நிலையம் தெரிவித்துள்ளது.

இவ்வாறு அடையாளம் காணப்பட்ட இரு பிரதேசங்களினதும் நிலக்கீழ் நீர்மட்டம், 15 மீற்றர் ஆழத்துக்குக் கீழேயே காணப்படுகின்றது என்றும், அந்நிலையம் குறிப்பிட்டுள்ளது.

நேற்று முன்தினம் (27) வரையில், இலங்கையில் 464 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன என்றும் அவற்றில் 120 மரணங்கள், முஸ்லிம்கள் என்றும் தெரிவிக்கப்படுகிறது.