வவுணதீவில்,  இந்திய நாட்டின் 25 கோடி ரூபா அன்பளிப்பில் இரு மாடிகள் கொண்ட ”பாரத்” கலாச்சார மண்டபம் நிர்மாணிக்கப்படும் என மண்முனை மேற்கு(வவுணதீவு) பிரதேச சபையின் தவிசாளர் செ. சண்முகராஜா அவர்கள் தெரிவித்தார்.

இது தொடர்பான பேச்சுவாரத்தை 02.03.2021செவ்வாய்க்கிழமை இந்திய உயர் ஸ்தானிகாரியாலயத்தில் இந்தியத் துணைத் தூதுவர் திருமதி. பானு பிரகாஷ்ஸூக்கும் வவுணதீவு பிரதேச சபையின் தவிசாளர் செ.சண்முகராஜா, உப தவிசாளர் பொன்.செல்லத்துரை மற்றும் திரு.தவபாலரெட்ணம்  ஆகியோருக்கிடையே இடம்பெற்று இது குறித்த இறுதி முடிவெடுக்கப்பட்டு உத்தேச மதிப்பீட்டரிக்கையும்  கையளிக்கப்பட்டதாக தவிசாளர் செ. சண்முகராஜா தெரிவித்தார்.

அவர் இதுபற்றி மேலும் தெரிவிக்கையில்,

மத்திய அரசோ அல்லது  கிழக்கு மாகாண சபையோ எமது பிரதேசத்திற்கான பாரிய வேலைத்திட்டங்களை நிறைவேற்றித் தருவதில்லை. மட்டக்களப்பு மாவட்ட நிருவாகமும் இவைகளை கண்டும் காணாததுபோல காலத்தைக் கடத்துகிறது

எமது தேவைகளை நிறைவேற்றுவதற்கு மாற்று வழிகளைத் தேடவேண்டியுள்ளது. எமது பிரதேசத்திற்கென கலாச்சார மண்டபமோ, ஒன்று கூடல் மண்டபமோ

இற்றைவரை நிர்மாணிக்கப்படவில்லை.

இதையிட்டு  இந்திய உயர் ஸ்தானிகாரியாலயத்தின் கவனத்திற்கு கொண்டுவந்தோம்.

இந்தியாவின் உயர் ஸ்தானிகாரியாலயத்தின் உதவித்தூதுவர் திருமதி. பானு பிரகாஸூடன் இது தொடர்பாக ஓரிரு சுற்றுப் பேச்சுவார்தைகளை நடாத்தியிருந்தோம்.

எங்களின் கலாச்சார மண்டபத் தேவையையும், ஒன்று கூடல் மண்டபத் தேவையையும் அவர் நன்றாக விளங்கிக் கொண்டார்

எங்களிடம் நிலவளம் இருக்கிறது. கட்டிட நிர்மாணத்தில் பிரச்சனைகள் தோன்ற வாய்ப்பில்லை. இதற்கான மதிப்பீட்டறிக்கை ரூபா 25 கோடி தேவையெனக்காட்டுகிறது. அதனை அன்பளிப்பாகத் தருவதாக இந்தியாவின் உயர் ஸ்தானிகாரியாலயம் தெரிவித்துள்ளது.

இதற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதும் நிர்மாணவேலைகள் விரைவில் ஆரம்பிக்கப்படும் என்றார்.