தேசிய அடையாள அட்டைக்கான தகவல்களை ஒன்லைன் (online) ஊடாக உறுதிப்படுத்தும் விசேட வேலைத்திட்டமொன்றை ஆட்பதிவு திணைக்களம் ஆரம்பித்துள்ளது.

இலங்கையிலுள்ள அரச நிறுவனங்கள், கூட்டுத்தாபனங்கள், திணைக்களங்கள், வங்கிகள், நிதி நிறுவனங்களில் சேவைகளை பெற்றுக்கொள்ளும் போது, அந்தந்த நிறுவனங்களிலுள்ள ஊழியர்களின் சுயவிருப்பின் அடிப்படையில் தேசிய அடையாள அட்டையிலுள்ள தகவல்களை ஒன்லைன் ஊடாக உறுதிப்படுத்திக்கொள்வதற்கு சந்தர்ப்பம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் வியானி குணதிலக்க தெரிவித்தார்.

தனிநபர் தகவல்களை ஒன்லைன் ஊடாக உறுதி செய்து சேவைகளை பெற்றுக்கொள்வதற்காக, இலங்கை பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணையகம், குடிவரவு, குடியகல்வு திணைக்களம் உள்ளிட்ட சில நிறுவனங்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் வியானி குணதிலக்க குறிப்பிட்டார்.

ஓய்வூதிய திணைக்களம் உள்ளிட்ட மேலும் சில நிறுவனங்களூடாக இதற்கான உடன்பாடு கைச்சாத்திட திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப பிரதிநிதிகளின் ஒத்துழைப்புடன் முன்னெடுக்கப்படும் இந்த திட்டத்தினூடாக மோசடிகளை தவிர்த்துக்கொள்ள முடியும் என ஆட்பதிவு ஆணையாளர் நாயகம் சுட்டிக்காட்டினார்.

அதற்கமைய, டிஜிட்டல் செயற்பாட்டினூடாக தனிநபர்களின் தரவுகளை மிகத் துல்லியமாகவும் நம்பிக்கையுடனும் உறுதிப்படுத்திக்கொள்வதனூடாக, சிறந்த சேவையை வழங்க அனைத்து நிறுவனங்களுக்கும் தேவையான ஒத்துழைப்புகளை வழங்க முடியும் என ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் வியானி குணதிலக்க மேலும் தெரிவித்தார்.