மனித உரிமை மீறல்களுக்கு எதிராகவும் பெண்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு  எதிராகவும் சர்வதேச நீதி கோரி, யாழ்ப்பாணத்தில் தீப்பந்த போராட்டமொன்று, இன்று (08) முன்னெடுக்கப்பட்டது.

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த வலியுறுத்தி, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் மற்றும் கிழக்கு பல்கலைக்கழகம் மாணவர்களால் நல்லூரில் முன்னெடுக்கப்பட்டு வரும் சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் இடத்திலேயே, இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

 காணாமல் ஆக்கப்பட்டவர்கள் உறவினர்கள் இணைந்து முன்னெடுத்த இந்தப் போராட்டத்தில்,  தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம், உள்ளூராட்சி மன்றங்களின் உறுப்பினர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், காணாமல் ஆக்கப்பட்டவர்களின உறவினர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

இதேவேளை, முல்லைத்தீவு மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால்,  சர்வதேச மகளிர் தினத்தை துக்க தினமாக அனுஷ்டித்து முல்லைத்தீவில் மாபெரும் கவனயீர்ப்புப் பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டது.

முல்லைதீவில் புனித இராயப்பர் ஆலயத்துக்கு அருகாமையில் இருந்து ஆரம்பமான இந்தப் பேரணி,  நகரை நோக்கி சென்றமை குறிப்பிடத்தக்கது.