சர்வதேச மகளிர் தினத்தையொட்டி, மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன.

அந்தவகையில், சுயாதீன அபிவிருத்திக்கான பெண்கள் செயற்பாட்டு வலையமைப்பின் ஏற்பாட்டில், மட்டக்களப்பு காந்திப் பூங்கா முன்றலில் பெண்கள் உரிமைகளை வலியறுத்தும் முகமாக மூன்று கோரிக்கைகளை முன்நிறுத்தி, கவனயீர்ப்பு முன்னெடுக்கப்பட்டது.

இந்தப் போராட்டத்தில் “அரசே பெண்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாப்பதில் உமது பங்கு என்ன?”, “மாகாண சபைகளில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அரசு உறுதிப்படுத்துமா?”, “பெண்களின் மனித உரிமைகள் எங்கே”, “வீட்டை ஆளும் பெண்கள் நாட்டை ஆள முடியாதா?” போன்ற சுலோக அட்டைகளை தாங்கியவாறு, மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மகளிர் அமைப்புகளில் உள்ள பெண்கள் கலந்துகொண்டனர்.

சட்டவாக்கல் சபையில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்கச் செய்தல், தற்போது இராஜாங்க அமைச்சின் கீழுள்ள மகளிர் விவகார அமைச்சை அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சாக உருவாக்கி, பெண் அமைச்சரின் ஒருவரின் கீழ் கொண்டுவருதல், அரசமைப்புச் சட்டத்தில் குறிப்பிட்டுள்ளவாறு பெண்களுக்கான உரிமைகள் பாதுகாகப்படல் வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்நிறுத்தி, இந்தக் கவனயீர்ப்பு நடைபெற்றது.

மேற்குறித்த கோரிக்கைகள் அடங்கிய மகஜர், உதவி அரசாங்க அதிபரிடம் இதன்போது கையளிக்கப்பட்டது.