யாழ் காங்கேசன்துறை துறைமுகத்தை இந்தியாவின் புதுச்சேரிக்கு அருகில் உள்ள காரைக்காலுடன் இணைக்கும் படகு சேவையை ஆரம்பிப்பது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் அண்மையில் இறுதி செய்யப்பட்டுள்ளதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் கொழும்பு – தூத்துக்குடி இணைப்பிற்கான வாய்ப்புள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகர் வீரகேசரிக்கு வழங்கியுள்ள செவ்வியில் குறிப்பிட்டுள்ளார்.

காங்கேசன்துறை துறைமுகத்தை 45.27 மில்லியன் அமெரிக்க டொலர், இந்திய உதவியுடன் அபிவிருத்தி செய்வதற்கு இலங்கை ஒப்பந்தம் செய்துள்ளதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், இந்தியாவுடனான திட்டமிட்ட விமானங்களுக்காக இலங்கை தனது வான்வௌியை மீண்டும் திறக்கும் போது பலாலிக்கான விமான சேவையை இந்தியா மீண்டும் ஆரம்பிக்கும் எனவும் இந்திய உயர்ஸ்தானிகர் கூறியதாக பத்திரிகை செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்துடன், பொருளாதார உந்து சக்திக்காக ஒரு பில்லியன் அமெரிக்க டொலரை இலங்கை கோரியுள்ளதாகவும் அது தொடர்பில் தற்போது பரிசீலனைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் இந்திய உயர்ஸ்தானிகர் கூறியுள்ளார்.

ETCA எனப்படும் பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கான நோக்கம் குறித்து இலங்கையின் வர்த்தக அமைச்சர்​ அண்மையில் கூறியுள்ள விடயம் தொடர்பில் இந்தியா கவனம் செலுத்தியுள்ளதாகவும், அதற்காக ஏற்கனவே 11 சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நிறைவடைந்துள்ளதாகவும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே தெரிவித்துள்ளார்.