இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பக்லே அவர்களுக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்குமிடையிலான விசேட சந்திப்பு இன்றுமுற்பகல் யாழ். கொக்குவிலில் அமைந்துள்ள தனியார் விடுதியில்  நடைபெற்றது.

இச்சந்திப்பில் தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, பாராளுமன்ற உறுப்பினர்களான தர்மலிங்கம் சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன், சி.சிறீதரன், எம்.ஏ.சுமந்திரன், சாள்ஸ் நிர்மலநாதன் ஆகியோரும், முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களான பா.கஜதீபன், சுகிர்தன், சயந்தன், பிரதேச சபை தவிசாளர்கள் ஜெபநேசன், சிவமங்கை இராமநாதன், வேழமாலிகிதன்,  ஐங்கரன் உள்ளிட்டவர்களும் கலந்து கொண்டனர்,

இந்திய  தரப்பில் இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பக்லே அவர்களுடன் இந்திய தூதரக அரசியல் செயலாளர், யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணைத் தூதுவர் சங்கர் பாலச்சந்திரன் மற்றும் தூதரக   அதிகாரிகளும் கலந்து கொண்டனர் .

இச்சந்திப்பின்போது, யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் (பலாலி), காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்தி,  காங்கேசன்துறை  சீமெந்து தொழிற்சாலை, தலைமன்னார்-இராமேஸ்வரம் கப்பல் சேவை, தமிழ் மக்களின் பிரச்சினைக்கான அரசியல் தீர்வு என்பன தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

அத்துடன் மேற்கொள்ளப்பட வேண்டிய அபிவிருத்தி பணிகள் தொடர்பிலும், வேலைவாய்ப்புகளை தரக்கூடிய கைத்தொழில்கள் தொடர்பிலும் எடுத்துக் கூறிய கூட்டமைப்பின் பிரதிநிதிகள் அவற்றுக்கு உதவுமாறும் கேட்டுக்கொண்டனர்.

இதன் போது, தாங்கள் அபிவிருத்தி சம்பந்தமாக கூடுதல் கவனமெடுப்பதாகவும், தமிழ் மக்களுடைய தேவைகளை செய்து கொடுக்க முயற்சிப்பதாகவும் 13ஆவது திருத்தத்தை பாதுகாக்க வேண்டும். ஆகவே மாகாண சபை தேர்தல்கள் நடைபெற வேண்டும். இல்லாவிடில் மாகாண சபை இல்லாமற் போய்விட்டது என்ற அபிப்பிராயத்தை உருவாக்கி விடும் என்றும் இந்திய தூதுவர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.