கிளிநொச்சி உருத்திரபுரத்திலுள்ள உருத்திரபுரீஸ்வரர் கோவில் முன்றலில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதற்கு தடை விதிக்குமாறு கோரி பொலிஸார் தாக்கல் செய்திருந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற நீதிபதி த. சரவணராஜா முன்னிலையில் இந்த மனு இன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

உருத்திரபுரத்திலுள்ள சிவன் கோவிலில் தொல்பொருள் அகழ்வாராய்ச்சி இடம்பெறவுள்ளதாக வௌியான தகவலை அடுத்து, அப்பகுதி மக்கள் கடந்த 24 ஆம் திகதி கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொன்மைவாய்ந்த இந்த சிவாலய வளாகத்தில் அகழ்வாராய்ச்சிகளை முன்னெடுக்க வேண்டாம் என மக்கள் தெரிவித்தனர்.

பொதுமக்களின் எதிர்ப்பை அடுத்து தொல்பொருள் திணைக்களத்தினர் அங்கிருந்து வௌியேற நேரிட்டது.

இந்த போராட்டத்தின் போது பொதுத்தொல்லை ஏற்படுத்தப்பட்டதாக ஆலய நிர்வாகத்தின் மூவரின் பெயர் குறிப்பிடப்பட்டு குற்றவியல் நடவடிக்கை கோவையின் 106 ஆம் பிரிவின் கீழ் கிளிநொச்சி பொலிஸாரால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த வழக்கு இன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே அதனை தள்ளுபடி செய்து நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

உருத்திரபுரம் சிவாலயத்தில் தொல்பொருள் திணைக்களத்தினர் அகழ்வாராய்ச்சி முன்னெடுப்பதற்கு மக்கள் தொடர்ந்தும் எதிர்ப்பை வௌியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.