யாழ் மாநகர சபையை அழகாகவும் தூய்மையாகவும் பேணுவதற்காக 5 ஊழியர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டமை தொடர்பில் தற்போது அதிகம் பேசப்பட்டு வருகின்றது.

மாநகர சபையினால் நியமிக்கப்பட்ட ஐவரைக் கொண்ட ஊழியர் குழு நேற்று (07) கடமையில் ஈடுபட்டிருந்தது.

இந்த நிலையில், மாநகர சபையின் இந்த நடவடிக்கைக்கு பாராளுமன்றத்தில் இன்று எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து, யாழ். மாநகர மேயர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் இன்று ஊடகங்களுக்கு தௌிவுபடுத்தினார்.

உண்மையில் யாழ். மாநகரை அசிங்கப்படுத்துகின்ற, குப்பைகளை வீசி எறிகின்ற, கண்ட இடங்களில் வெற்றிலை எச்சிலை உமிழ்கின்றவர்களைக் கண்டறிந்து, அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்காகவே யாழ். மாநகர சபை தீர்மானம் நிறைவேற்றியது. அந்த தீர்மானத்தின் ஊடாக எவ்வளவு ரூபா தண்டப்பணம் அறவிடுவது என்பதை வர்த்தமானியில் அறிவித்து, வர்த்தமானி பிரசுரம் வௌியான பின்னர் வழமையான செயற்பாட்டில் ஒன்றாக அதை முன்னெடுக்க சிலரை பணிக்கு அமர்த்தியிருந்தோம்

என விஸ்வலிங்கம் மணிவண்ணன் கூறினார்.

பணியமர்த்தப்பட்டவர்கள் அவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுகின்ற போது, மக்கள் அவர்களை இனங்காண வேண்டிய தேவை இருந்ததாலும் வேண்டத்தகாத பிரச்சினைகள் ஏற்படாமல் இருக்கவும் சீருடை ஒன்றை அறிமுகப்படுத்தியாக அவர் விளக்கமளித்தார்.

எனினும், சீருடை தமிழீழ விடுதலைப்புலிகளின் சீருடையை ஒத்ததாக இருக்கிறது என சிலர் முன்வைத்த குற்றச்சாட்டை அவர் நிராகரித்தார்.

கொழும்பு மாநகர சபையின் முன்மாதிரியான செயற்பாட்டைப் பின்பற்றியே அவர்களுக்கான சீருடையை வடிவமைத்ததாகவும் அவர் தௌிவுபடுத்தினார்.

எனினும், இந்த விடயத்துடன் தொடர்புடையவர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாக பொலிஸார் கூறினர்.

நாட்டில் ஒரு சட்டம் காணப்படும் நிலையில், இவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுக்க முடியாது எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

அவர்கள் அணிந்திருந்த சீருடையை பொலிஸார் பெற்றுக்கொண்டுள்ளதுடன், அது தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டது வருகின்றன.