கொரோனா தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கையின் இரண்டாம் கட்டம் எதிர்வரும் 23 ஆம் திகதி தொடக்கம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவினால் முன்வைக்கப்பட்ட கேள்விக்கு பதில் வழங்கிய போதே சுகாதார அமைச்சர் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.

எதிர்வரும் 23 ஆம் திகதி தொடக்கம் ஜூலை மாதம் 06 ஆம் திகதி வரை இரண்டாம் கட்ட தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சர் கூறினார்.

இரண்டாம் கட்டத்தில் 9,24,687 பேருக்கு COVID-19 தடுப்பூசி ஏற்றப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

எனினும், 3,56,730 தடுப்பூசிகள் மாத்திரமே களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் குறிப்பிட்டார்.

எனினும், 5,68,000 தடுப்பூசிகள் தேவையாக உள்ளதாகவும் அவற்றை கொள்வனவு செய்வதற்கான நடவடிக்கைகளை அரச ஔடதங்கள் கூட்டுத்தாபனம் முன்னெடுத்துள்ளதாகவும் சுகாதார அமைச்சர் தெரிவித்தார்.

முதல் கட்டத்தில் ஏற்றப்பட்ட Oxford Astrazeneca தடுபூசியே இரண்டாம் கட்டத்தில் ஏற்றப்பட வேண்டும் என்பதால், இந்த தடுப்பூசிகளை கொள்வனவு செய்வதற்கு இந்தியாவின் Serum நிறுவனத்துடன் கலந்துரையாடுவதாகவும் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி கூறினார்.