கேள்வி:
ஐ.நா.மனித உரிமைப் பேரவையில் இலங்கை தொடர்பாக பிரேணை கடந்த மாதம் நிறைவேற்றப்பட்டுள்ளது.இதன் பின்னரான தற்போதைய அரசியல் சூழ்நிலை எவ்வாறுள்ளது?

பதில்:
தமிழ் மக்களைப் பொறுத்த மட்டில் தாங்கள் எதிர்பார்த்த விடயங்கள் முழுவதும் பிரேணையில் உள்ளடக்கப்படவில்லையென்ற ஒரு ஆதங்கம் இருக்கின்றது. நாங்கள் சொல்லுகின்ற விடயங்கள் அனைத்தும் உள்ளடக்கப்பட வேண்டுமென எதிர்பார்ப்பது ஒரு புத்திசாதூரியமற்ற விடயமாகும்.
இது 47 நாடுகள் சேர்ந்து எடுக்கும் முடிவாகும்.

இம் முறை ஐ.நா. மனித உரிமை பேரவை அமர்வில் பிரித்தானியா இலங்கை தொடர்பில் யோசனையை கொண்டு வர இதற்கு கனடா, ஜேர்மனி, மொன்ரி நீக்கிரோ மற்றும் வட மாசிடோனியா ஆகிய இணை அனுசரணை வழங்கின. இந்த யோசனையை பிரேரணையாக நிறைவேற்றுவதற்கு பேரவையிலுள்ள ஏனைய நாடுகளும் ஒத்துப்போகின்ற போது தான் நிச்சயமாக யோசனையில் மாற்றங்கள் செய்யும் நிலைமை ஏற்படும்.

குறிப்பாக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு பாரப்படுத்துவது என்பது ஐ.நா.மனித உரிமை பேரவையின் அதிகாரத்துக்கு உட்படுத்தப்பட்டதல்ல. அது பாதுகாப்பு சபையின் ஊடாகவே செய்யப்பட வேண்டிய விடயமாகும்.

பொதுவாக விடயமொன்றை ஐ.நா. மனித உரிமை பேரவையிருந்து பாதுகாப்பு சபைக்கு கொண்டு செல்வது என்பதே ஒரு கடினமான விடயமாகும்.

இதனை விட இலங்கைக்கு கடுமையான ஆதரவை கொடுக்கக் கூடிய ரசியா, சீனா போன்ற நாடுகள் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு கொண்டு செல்வதை (veto power) தடுத்துவிடும்.

இது இவ்வாறு இருக்க தமிழ் மக்களின் அபிலாசைகளை ஏற்றுக்கொண்டு முழுமையான ஆதரவு தரக்குடிய நாடுகள் எதுவும் தற்போது இல்லை.

ஆகவே இந்த விடயத்தை அவதானமாகவும் படிப்படியாக முன்னெடுத்து செல்வதன் மூலமே எமது இலக்கை நோக்கி முன்னேற முடியும். வெறுமனே ஒரு தமிழ் கட்சி, மற்ற தமிழ் கட்சி மேல் இவர்களால் தான் பிரேரணை பலவீனமடைந்தது என்று அரசியலுக்காக கூச்சல் இடுவது தமிழ் மக்களை பிளவுபடுத்தி விரக்தி நிலைக்கு கொண்டு செல்லுமே தவிர வேறு எந்த நன்மையும் அளிக்காது.

கேள்வி:
பொதுவாக ஐ.நா.மனித உரிமை பேரவையில் பிரேரணைகள் நிறைவேற்றப்படுகின்றன. எதுவும் நடைபெறுவதில்லையென்ற எண்ணப்பாடு மக்கள் மத்தியில் உள்ளமை தொடர்பில்…………?

பதில்:
ஐ.நா.மனித உரிமை பேரவையில் பிரேரணைகள் நிறைவேற்றப்படுகின்ற போதும் பிரேரணையிலுள்ள விடயங்களை நிறைவேற்றுமாறு இலங்கையை நிர்ப்பந்திக்கும் அதிகாரம் ஐ.நாவுக்கு இல்லை. இப் பிரேரணைகள் இலங்கை அரசை கட்டுப்படுத்தாத பிரேரணைகள் ஆகும்.

எனினும் தீர்மானங்கள் இலங்கை அரசக்கு தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு தீர்வு காணவேண்டும் என்ற அழுத்தங்களை கொடுக்கும். அத்தோடு இந்த தீர்மானத்தைக் கொண்டு வந்த பெரிய நாடுகள் சிறிலங்கா மீது நேரடியான தாக்கங்கள் வரக் கூடிய அழுத்தங்களை கொடுப்பதங்கான சந்தர்ப்பங்களும் ஏற்படலாம்.
அது மாத்திரமன்றி பிரேரணைகள் மூலம் தமிழ் மக்களின் பிரச்சினைகள் சர்வதேச அரங்கில் பேசு பொருளாக தொடர்ந்து இருப்பதன் மூலம் அரசு தமிழ் மக்களுக்கு நீதியும் ஒரு நியாயமான அரசியல் தீர்வும் பெற்றுக் கொடுப்பதற்கான அழுத்தங்கள் தொடர்ந்து காணப்படும்.

இம்முறை பிரேணையில் சில வரவேற்கத்தக்க விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

கேள்வி:
தற்போதைய அரசியல் சூழ்நிலையில் தமிழ் கட்சிகள் எவ்வாறு செயற்பட வேண்டுமென்று கருதுகின்றீர்கள்?

பதில்;
தற்போதைய சூழ்நிலையில் தமிழ் மக்களின் அனைத்து பிரச்சினைகளுக்கும் ஒன்றுபட்ட கருத்தை, செயற்பாட்டை முன்வைக்க தமிழ் கட்சிகள் தங்களுக்குள் ஒற்றுமையை உருவாக்க வேண்டும்.

ஆனால் ஐ.நா.மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட யோசனையின் பின்னரான நிலைமையில் ஏதோ தமிழ் தேசிய கூட்டமைப்பின் தவறினால் தான் இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு பாரப்படுத்துவது இல்லாமல் போனது போல் கருத்துகளை அரசியல் நோக்கில் கூறி வருவது முற்று முழுதாக உண்மைக்கு புறப்பானது மாத்திரம் அல்லாது தமிழ் மக்கள் மத்தியில் இருக்கக் கூடிய பிளவை தெடர்ந்தும் வைத்திருக்கும்.
இவ் நிலை எவ் வகையிலும் தமிழ் மக்களுக்கு நன்மை பயக்காது.

எனவே நாம் எமது அரசியல் வேறுபாடுகளை , காழ்ப்புணர்வுகளை ஒரு பக்கத்தில் வைத்துவிட்டு தமிழ் மக்களின் அபிலாசைகளை பூர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகளை ஒன்றுபட்ட செயற்பாட்டின் முலம் எடுக்க வேண்டும்.

கேள்வி:
மாகாண சபை தேர்தல் குறித்து அரசாங்க தரப்பிலுள்ளவர்கள் கருத்துக்களை முன் வைத்து வருகின்றமை தொடர்பில்…………………..?

பதில்:
மாகாண சபை தேர்தல் இவ்வருட இறுதிக்குள் நடைபெறுவதற்கான சாத்தியங்கள் உள்ளன.
அரசாங்கம் சிங்கள மக்கள் மத்தியில் செல்வாக்கை இழந்து வருவது போல் தெரிகின்றது. அத்துடன் மாகாண சபை முறையை அமுல்படுத்தும்படி சர்வதேச ரீதியாக முக்கியமாக இந்தியாவிடமிருந்து பலமான அழுத்தங்கள் கொடுக்கப்படுகின்றன. ஆகவே தேர்தல் நடத்துவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன.
இருந்தாலும் இத் தேர்தலை நடத்துவதில் சட்ட ரீதியான பிரச்சனைகள் உள்ளன. இந்த சட்ட சிக்கல்களை நிவர்த்தி செய்வதும் செய்யாமல் விடுவதும் அரசாங்கம் மாகாண சபை தேர்தலை நடத்துவதில் உள்ள கரிசனையை பொறுத்ததே.

கேள்வி:
மாகாண சபை தேர்தலை தமிழ் கட்சிகள் ஒன்றுபட்டு சந்திப்பதற்கான பேச்சுகள் நடைபெற்றன. எனினும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி கூட்டுக்கு வரப் போவதில்லையென தெரிவித்துள்ளது. இது சம்பந்தமாக…

பதில்;
தமிழ் மக்கள் தேசிய கூட்டணி தலைவர் விக்னேஸ்வரன் யாழ்.மாநகர மேயர் மணிவண்ணனை பொது முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்த முடியுமென தெரிவித்துள்ளார்.

பொது வேட்பாளரை நிறுத்துவது தொடர்பிலான முடிவு தமிழ் கட்சிகள் ஒன்று சேர்ந்து எடுக்க வேண்டிய விடயமாகும். தமிழரசு கட்சியும் மாவை சேனாதிராஜாவை முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்த வேண்டுமென்ற கருத்துடன் உள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பில் எமது கட்சியும் பங்காளிகள் என்ற வகையில் நாமும் இதே கருத்துடன் உள்ளோம்.

மணிவண்ணனை பொறுத்தமட்டில் வட மாகாணம் முழுவதும் பரந்துபட்ட அளவில் செல்வக்கு பெற்றவராக நினைக்கவில்லை. ஆகவே அவரை ஆதரிப்பது கடினமானது.

எது எப்படி இருந்தாலும் இத் தேர்தலை தமிழ் தேசிய பரப்பில் உள்ள கட்சிகள் ஒற்றுமையாக போட்டியிடுவதே எம் இனத்துக்கு நன்மை பயக்கும்.

நன்றி – தினக்குரல் (04.04.2021)