அரசாங்கத்தை வீழ்த்துகின்ற நிலையில் பங்காளி கட்சிகள் இருக்கும் என்று நான் நம்பவில்லை என யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் தெரிவித்தார். வவுனியாவுக்கு விஜயம் செய்த அவர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்திய மீனவர் விடயத்தில் கட்டணம் அறவிட்டு, அதனை எமது மீனவர்களுக்கு வழங்கலாம் என்று கடற்றொழில் அமைச்சர் சொல்லியிருக்கின்றார். அது எமது மீனவர்களை பாதிக்கும் ஒரு விடயமே. அதற்கு மக்கள் மத்தியில் எதிர்ப்பு இருக்கின்றது. எனினும் அதனை ஒரு சிந்தனையாக சொல்லியிருப்பதாகவும் திட்டமாக சொல்லவில்லை என்றும் அமைச்சர் கூறியிருக்கின்றார்.

குறிப்பாக மீன்பிடித்தொழிலில் ஈடுபடும் இந்திய முதலாளிகள் எவ்வளவு பணத்தினை வழங்கியும் அந்த அனுமதியினை பெறுவார்கள். இதனால் ஏழை கடற்றொழிலாளர்கள் நன்மையடையமாட்டார்கள். எனவே அந்த விடயத்தினை அமைச்சர் மறுதரம் சிந்திப்பது நல்ல விடயம். அந்த விடயத்தில் அவர் அக்கறை கொண்டுள்ளதால் அந்த சிந்தனையை நடைமுறைப்படுத்துவார் என்று நம்பவில்லை.

வாழ்வாதாரம் என்பது தொப்புள்கொடி மற்றும் தமிழ் உணர்வுகளுக்கு அப்பாற்பட்டது. இந்தியாவை பொறுத்தவரை கடற்றொழிலில் அதிகம் ஈடுபடுபவர்கள் பெரிய முதலாளிகளின் கீழே வேலை செய்யும் தொழிலாளிகளாக இருக்கின்றனர்.

அவர்களுக்கு அந்த தொழிலே மூலாதாரமாகவுள்ளது. யாராக இருந்தாலும் தமது வாழ்வாதாரத்தினை பார்க்கவே முயற்சிசெய்வர். எனவே அந்த விடயத்தினை விரைவில் பேசித்தீர்ப்பதன் மூலம் அதனை கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகளை எடுக்க வேண்டும்.

தமிழ் மக்கள் மீதான அடக்குமுறைகளுக்கு எதிராக தொடர்ச்சியாக நாம் பல்வேறு செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றோம். இந்த அரசில் அந்த அழுத்தங்கள் கூடுவதற்கான வாய்ப்புகள் தான் அதிகம் இருக்கின்றன. சிங்கள மக்களின் வாக்குகளை பெறுவதற்கான அப்படி செய்யப்படுகின்றது.

பெரும்பான்மை சிங்கள மக்கள் அப்படியான மனப்போக்கில் இருப்பவர்கள்அல்ல. எனினும் அரசியல்வாதிகள் தூண்டும் போது அதனை அவர்கள் கடைப்பிடித்து வாக்களிப்பார்கள். கடந்த காலங்களில் சிங்கள கடும்போக்காளர்களாக இருந்த பலர் அரசியலில் படுதோல்வியடைந்திருக்கிறார்கள். எனவே இந்த அரசு இதனையே நம்பியிருந்தால் பெரும் பின்னடைவு மிகவிரைவில் வரும்.
அரசுக்குள் சில குழப்பங்கள் ஏற்பட்டிருந்தாலும், உடனடியாக அரசாங்கத்தில் மாற்றம் ஏற்படும் என்று நான் நம்பவில்லை. அதில் ஒரு பலவீனமான நிலையை ஏற்படுத்தலாமே தவிர, அரசை வீழ்த்துகின்ற நிலையில் பங்காளிகட்சிகள் இருக்கும் என்று நான் நம்பவில்லை. எனினும் ஒரு பலவீனத்தை உருவாக்குவதற்கான வாய்ப்புக்கள் இருக்கின்றன.

மாகாண சபை தேர்தலில் தொகுதிக்கு 3 பேரை நியமிப்பது என்ற பெரமுனவின் யோசனை நாட்டின் எந்தப்பகுதிக்கும் சாத்தியமில்லாத ஒன்று. அது குழப்புகின்ற ஒரு விடயம். ஒவ்வொரு இடத்தில் ஒவ்வொருவரை நிறுத்திவிட்டு அவற்றை தாம் வென்றெடுக்கலாம் என்று பசில் ராஜபக்ச எண்ணியிருக்கலாம். அதற்காக இப்படி ஒரு திட்டத்தினை வைத்திருக்கலாம். இது ஜனநாயகத்தையும் அரசியல் கட்சிகளையும் கேலிக்கிடமாக்கும் விடயமாகவே நான் பார்க்கின்றேன் என்றார்.

நன்றி- வீரகேசரி (ஞாயிறு 18.04.2021)