வருடாந்தம் புதுப்பிக்கப்படும் வாக்காளர் பெயர் பட்டியலில் 4 மாதங்களுக்கு ஒருமுறை இணைப்புக்களை சேர்ப்பதற்காக சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அண்மையில் நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்டுள்ள வாக்காளர் பெயர் பட்டியல் திருத்த சட்டமூலத்தின் ஊடாக இந்த திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளதாக அந்த ஆணைக்குழுவின் தவிசாளர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

வருடாந்த வாக்காளர் பெயர் பட்டியலை தயாரிக்கும் இறுதி திகதிக்கு பின்னர் 18 வயதை பூர்த்தி செய்யும் இளைஞர், யுவதிகளை அந்த பட்டியலில் உள்ளீர்ப்பதில் சிக்கல் நிலைமை காணப்படுவதால் குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இதன்படி புதிய திருத்தத்தின் ஊடாக பிரதான வாக்காளர் பெயர் பட்டியல் தயாரித்த பின்னர் 18 வயதினை பூர்த்தி செய்பவர்களும் குறித்த பட்டியலில் உள்ளீர்க்கப்படுவதனால் அவர்களுக்கும் வாக்குகளை அளிக்க கூடிய வாய்ப்பு கிடைப்பதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் தெரிவித்தார்.