இலங்கை முழுவதிலும் கொரோனா தொற்று மிகப் பாரியளவில் பாதிப்பை உருவாக்கி வருகின்றது. பல உயிரிழப்புக்கள் ஏற்பட்டிருப்பதுடன் பல்லாயிக் கணக்கானோர் பாதிக்கப்பட்டும் வருகின்றனர்.

கொரோனா பெருந்தொற்று தீவிரமாக பரவி வரும் நிலையில் சுகாதார கட்டுப்பாடுகளை மிக தீவிரமாக அமுல்ப்படுத்தி கொரோனாவைக் கட்டுப்படுத்த வேண்டும் என புளொட் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்தக் காலகட்டத்தில் மதச் சடங்குகள் நடைபெற வேண்டியது மிக அவசியமானதொன்றே. ஆயினும் பெருமளவில் மக்கள் கூடுவதை கட்டாயமாக தடுக்க வேண்டும்.

வடக்கைப் பொறுத்தமட்டில் சைவ ஆலயங்களில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கின்ற போதிலும், தென்னிலங்கையிலிருந்து ஆட்களை வரவழைத்து நயினாதீவு நாகவிகாரையில் தேசிய வெசாக் நிகழ்வுகளை நடத்துவதற்கு அனுமதித்திருப்பது மிகவும் தவறான நடவடிக்கையாகும்.

கொரோனாவானது மேலும் அதிகரித்துக் கொண்டே போகின்றது. அது சகலருக்கும் பரவக்கூடிய ஒன்று. ஆகவே, மதங்களைக் கடந்து சகலருக்கும் பொதுவான பாதுகாப்பு விடயங்களை கையாள வேண்டும்.
கொரோனாவிற்கு எதிரான சுகாதார ரீதியான சகல கட்டுப்பாடுகளையும் பொதுவான முறையில் முன்னெடுக்க வேண்டும்.

குறிப்பிட்ட மதங்களின் விழாக்களைக் கட்டுப்படுத்துவது, மற்றைய மதங்களின் விழாக்களைக் கவனிக்காது விடுவது என்பது அந்தக் கட்டுப்பாடுகளின் நோக்கங்கள்மீது மக்களைச் சந்தேகம் கொள்ள வைக்கின்றது.

ஆகவே கொரோனாவிற்கு எதிரான சகல கட்டுப்பாடுகளையும் உடனடியாக பொதுவான முறையில் முன்னெடுக்க வேண்டும். இந்த சுகாதார நடைமுறைகளை உரிய முறையில் அமுல்ப்படுத்துவதே உண்மையான கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கையாக அமையும். இதை, சம்பந்தப்பட்ட தரப்பினர் கவனத்தில் எடுத்து நடைமுறைப்படுத்த வேண்டும் என்றார்.