இந்தியாவில் கொரோனாத் தொற்றுப் பரவலானது தீவிரமடைந்து வருகின்றது. இதன் காரணமாக பல்வேறு உலக நாடுகள் இந்தியாவுடனான விமான சேவையை இடைநிறுத்தி வைத்துள்ளன. இந் நிலையில் இலங்கை அரசானது இந்தியாவுடனான விமான போக்குவரத்தில் மாற்றமொன்றினை ஏற்படுத்தி விமான சேவையைத் தொடரத் தீர்மானித்துள்ளது. அந்தவகையில் இந்தியாவிலிருந்து வரும் பயணிகளை தனிமைப் படுத்தும் கால அளவை ஏழு நாட்களிலிருந்து இரண்டு வாரங்களாக உயர்த்த இலங்கை அரசு தீர்மானித்துள்ளது. இந் நிலையில் இது குறித்து கருத்துத் தெரிவித்த ஆரம்ப சுகாதார சேவைகள், தொற்று நோய்கள் மற்றும் கொவிட் நோய்க் கட்டுப்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோ பிள்ளை’ இந்தியாவில் இருந்து பயணிகள் விமானங்கள் தொடர்ந்து இலங்கைக்கு வருவதாலும், தனிமைப்படுத்தப்பட்ட காலத்தை இரண்டு வாரங்களுக்கு நீட்டிப்பது கொவிட் தொற்றாளர்களைக் கண்டறிய போதுமானதாக இருக்கும் என்பதாலும் இத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகத் ‘ தெரிவித்துள்ளார். மேலும் இந்தியாவிலிருந்து வருபவர்களை யாழ்ப்பாணத்திலுள்ள பாலாலி விமான நிலையம் வழியாக பயணிக்க அனுமதிக்க வேண்டுமென இந்திய அரசு தெரிவித்துள்ளதாகவும் அதனை இலங்கை அரசு ஏற்றுக் கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந் நிலையில் இது குறித்துத் கருத்துத் தெரிவித்த சுற்றுலாத் துறை அமைச்சானது ‘ சுற்றுலாப் பயணிகளால் கடந்த நான்கு மாதங்களில் இலங்கையரசு சுமார் 16 மில்லியன் அமெரிக்க டொலர்களை வருவாயாக ஈட்டியுள்ளதாகத் தெரிவித்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.