நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் அமோக வெற்றிபெற்று, ஆறாவது தடவையாகவும், திராவிட முன்னேற்றக் கழகம் அதன் கூட்டணிக் கட்சிகளுடன் இணைந்து ஆட்சி அமைத்திட அறிவுபூர்வாக செயற்பட்டு அடித்தளமிட்ட திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரான தங்களுக்கு தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) சார்பில் மனமார்ந்த நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்ளுகின்றேன்.
அறுபதாம் ஆண்டுகளின் பிற்பகுதியில் மாணவனாக கோபாலபுரத்தில் சமூகப் பணிகளை ஆரம்பித்து, எண்பதாம் ஆண்டுகளில் கழகத்தின் இளைஞர் அணிச் செயலாளராக செயற்பட்ட காலம் தொட்டு கழகத்தின் வளர்ச்சியில், தங்கள் அயராத உழைப்பின் பங்களிப்பு தொடர்ச்சியாக வளர்ச்சியடைந்து மாபெரும் திராவிட இயக்கத்தினது மட்டுமல்லாது தமிழகத்தினதும் எதிர்காலத்தை பொறுப்பேற்கும் உன்னதமான கடமையினை காலம் இன்று தங்களுக்கு ஒப்படைத்திருப்பதை மகிழ்வுடன் காண்கின்றோம். அந்தக் கடமையில் தாங்கள் வெற்றி பெறவேண்டுமெனவும் வாழ்த்துகிறோம்.
தங்கள் தந்தையாரும் முன்னாள் முதல்வருமான கலைஞர் அவர்களுடன் எமது மறைந்த தலைவர் உமாமகேஸ்வரன் (முகுந்தன்) அவர்கள் மிக நெருக்கமான உறவுகளைக் கொண்டிருந்தார். அதனை நீங்களும் அறிவீர்கள். எங்களுடைய இயக்கத்துடன் தங்கள் தந்தை கொண்டிருந்த நெருக்கம் காரணமாக நானும் கலைஞர் அவர்களை பல தடவைகள் சந்தித்து தமிழ் மக்களுடைய பிரச்சினைகள் சம்பந்தமாகக் கலந்துரையாடி அவருடைய அறிவுரைகளைப் பெறும் வாய்ப்பைப் பெற்றிருந்தேன்.
குறிப்பாக, இந்திய தரப்புகளின் அனுசரனையுடன் திம்பு பேச்சுவார்த்தை உள்ளிட்ட பல பேச்சுவார்த்தைகள் இலங்கை அரசுடன் நடைபெற்ற சந்தர்ப்பங்களில் அந்த சந்திப்புக்களுக்கு செல்வதற்கு முன்பதாக கலைஞரிடம் சென்று கலந்துரையாடிச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தேன்.
அவ்வாறான சந்தர்ப்பங்களில் எல்லாம் கலைஞருடன் கூடவே நீங்களும் ஈழத் தமிழர்களின் பிரச்சினைகளை மிகுந்த அக்கறையுடனும் அனுதாபத்துடனும் அணுகியிருந்ததை நான் உணரத் தவறவில்லை. அந்த உணர்வுடனும் ஆதரவுடனுமே உங்கள் நிலைப்பாடு இன்றுவரை தொடர்கிறது என்பதை நம்புகின்றோம்.
தற்போதைய நெருக்கடியான நிலையிலே, இலங்கையில் வாழும் தமிழ் மக்களுடைய பிரச்சினைகள் தொடர்பாக, மாபெரும் திராவிட இயக்கத்தின் தலைவராகவும், தமிழகத்தின் முதற் குடிமகனாகவும் இந்திய நடுவண் அரசுக்கு நீங்கள் வழங்கக்கூடிய நியாயபூர்வமான அழுத்தங்கள் இலங்கையில் தமிழ் மக்களுக்கு மிக அவசியமான தேவையாக இருப்பது மாத்திரமல்ல தமிழ் மக்களுடைய அரசியல், சமூக, பொருளாதாரப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு அவ் அழுத்தங்கள் உறுதுணையாக அமையுமெனவும் நம்புகின்றோம்.
கடந்த காலங்களில் ஈழத்தமிழர்களின் துயர் துடைக்க தன்னால் இயன்றளவும் பணியாற்றிய கலைஞரின் வழிநின்று செயலாற்றி வரும் திராவிட முன்னேற்றக் கழகமும், அதன் தலைவரான தாங்களும் எமது மக்கள் தமது பாரம்பரிய வாழ்விடங்களில் சுதந்திரமாகவும் சமத்துவமாகவும் செழுமையாகவும் அமைதியாகவும் வாழ்வதற்கு முழுமையான அர்ப்பணிப்புடனான பங்களிப்பை எதிர்காலத்திலும் வழங்க வேண்டுமென உரிமையுடன் எதிர்பார்க்கின்றோம்.
நன்றி.
த.சித்தார்த்தன் (பா.உ)
தலைவர்
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்)
03.05.2021.
தலைவர்
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்)
03.05.2021.