எமது உரிமைப் போராட்டத்திற்கு உரிய அரசியல் தீர்வினை பெற்றுக்கொள்வதற்கு தி.மு.க ஆட்சி தொடர்ந்தும் ஆதரவினை வழங்க வேண்டும்- புளொட்டின் சர்வதேச ஊடகப் பேச்சாளர் செ.ஜெகநாதன் அவர்கள் தி.மு.க தலைவர் மு.க ஸ்டாலின் அவர்களுக்கு வாழ்த்து-
மதிப்பிற்கு உரிய திராவிட முன்னேற்ற கழக தலைவர் மாண்புமிகு மு.க, ஸ்டாலின் அவர்களுக்கு,
உங்கள் தலைமையில் திராவிட முன்னேற்ற கழகம் வெற்றி பெற்று நீங்கள் முதல்வராக பதவியேற்க இருப்பதனையிட்டு நாம் மகிழ்ச்சி அடைவதோடு எமது உளப்பூர்வமான வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்ளுகிறோம்.

உங்களின் தந்தையும் தலைவருமான கலைஞர் அவர்கள் ஆட்சியில் இருந்த வேளையில் தமிழ் மொழியை செம்மொழியாக அறிவிப்பதற்கும், அதனுடாக எமது மொழி உலக வளர்ச்சிகளின் தரத்திற்கு உயர்ந்து செல்வதற்கும் உழைத்திருந்தார் என்பது உலகம் அறிந்த விடயமாகும்.
அது மட்டும் அல்லாது உலகம் எங்கும் பரந்துவாழும் தமிழ் மக்களின் ஒட்டுமொத்த குரலாக ஓங்கி ஒலித்தும் இருந்தார். மேலும் இலங்கை தமிழ்ர்களின் உரிமைப் போராட்டம் குறித்த புரிதலும், அக்கறையும் அவருக்கு அதீதமாக இருந்தது. அதேபோன்று அவர் பாசறையிலும், வழிகாட்டலிலும் வளர்ந்து வந்த உங்களுக்கு ஈழ தமிழர்களின் மேல் அன்பும் அக்கறையும் இருக்கும் என்பதில் எமக்கு எவ்வித ஐயமும் இல்லை. உங்களின் ஆட்சியில் தமிழகம் மீண்டும் செழிப்பு பெற்று சமூக நீதிக்கான அரசாக மேலோங்க வேண்டுமென வாழ்த்துகிறோம்
எமது கட்சியின் செயலதிபரும், ஸ்தாபகருமான அமரர் உமா மகேஸ்வரன் அவர்கள் இலங்கை இந்திய உடன்படிக்கையினை அடுத்து நாடு திரும்பு முன்னர் கலைஞர் அவர்களை சந்தித்து நன்றி தெரிவித்து, ஆசியும் பெற்று சென்றிருந்தார். ஈழத்து இயக்க தலைவர்களில் முகுந்தன் (உமா மகேஸ்வரன்) மட்டுமே என்னை சந்தித்து நன்றி கூறி விடைபெற்று சென்றார் என்று கலைஞர் அவர்களே ஒரு தடவை பதிவு செய்திருந்தார்.
மேலும் ஈழ தமிழர்களின் கடந்த எழுபது வருட காலத்திக்கு மேலான உரிமை போராடத்திற்கு உரிய அரசியல் தீர்வினை பெற்றுக்கொள்வதற்கு உங்கள் தலைமையில் ஆன தி.மு.க ஆட்சி தொடர்ந்தும் ஆதரவினை வழங்க வேண்டுமென தயவுடன் கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வண்ணம்,
செல்வதுரை ஜெகநாதன்,
சர்வதேச ஊடகப் பேச்சாளர்,
தமிழ் ஈழ மக்கள் விடுதலை கழகம்(PLOTE)
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(DPLF)
02.05.2021.
Eppinger Str 29.
74080 Heilbronn, Germany.