ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் (புளொட்) மத்திய குழு உறுப்பினரும், கட்சியின் வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை உறுப்பினருமான திரு. தர்மலிங்கம் யோகராஜா (யோகன்) அவர்கள் வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் புதிய தவிசாளராக தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

தவிசாளராக இதுவரையிலும் கடமையாற்றிய ரெலோ அமைப்பின் துரைசாமி நடராஜசிங்கம்(ரவி) அவர்கள், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளான புளொட், ரெலோ அமைப்புகளுக்கிடையே ஏற்படுத்தப்பட்டிருந்த தேர்தல் கால உடன்படிக்கைக்கமைவாக, தனது தவிசாளர் பதவியை அண்மையில் இராஜினாமா செய்திருந்தார்.

இதையடுத்து இன்று (05.05.2021) முற்பகல் 10.00 மணியளவில் வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் ம.பற்றிக் நிரஞ்சன் தலைமையில் நடைபெற்ற புதிய தவிசாளர் தெரிவிற்கான கூட்டத்தில் திரு. தர்மலிங்கம் யோகராஜா (யோகன்) அவர்கள் வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் புதிய தவிசாளராக சபையில் அங்கத்துவம் வகிக்கும் அனைத்து கட்சிகளின் ஆதரவுடன் ஏகமனதாக தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.