யாழ். மாநகரில் தண்டப் பணம் அறவிடும் நடைமுறையை கையாளுவதற்காக அமைக்கப்பட்ட சீருடை அணிந்த காவல் படையின் உத்தியோகத்தர்கள் ஐந்து பேரும் வாக்குமூலம் பெறுவதற்காக பயங்கரவாத விசாரணைப் பிரிவுக்கு அழைக்கப்பட்டுள்ளனர். கொழும்பில் அமைந்துள்ள பயங்கரவாத விசாரணைப் பிரிவின் அலுவலகத்துக்கு (4ஆம் மாடிக்கு) எதிர்வரும் 11ஆம் திகதி காலை 9 மணிக்கு சமுகமளிக்குமாறு மேற்படி ஐவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. யாழ் மாநகரை தூய்மையான நகரமாகப் பேணுவதற்காக மாநகரசபை ஊழியர்கள் ஐவர் மாநகர காவலர்களாக பிரத்தியேக சீருடை அணிந்து கடந்த மாதம் கடமைக்கு அமர்த்தப்பட்டனர்.
எனினும் உத்தியோகத்தர்கள் அணிந்திருந்த சீருடை விடுதலைப் புலிகளின் காவல்துறையின் சீருடையை ஒத்தது என சர்ச்சை எழுந்தது. இந்தச் சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன், பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளுக்கு இங்கே அழுத்தவும்….
மறு அறிவித்தல் வரை பாடசாலைகளை மூடுவதற்கு தீர்மானம்-
சகல பாடசாலைகளும், முன்பள்ளி பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் தனியார் வகுப்புகள் யாவும் மறு அறிவித்தல் விடுக்கும் வரையிலும் மூடப்பட்டிருக்கும் என கல்வியமைச்சரான பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
வாழைச்சேனை மியான்குளம் விபத்தில் இருவர் மரணம்-
கொழும்பு-மட்டக்களப்பு பிரதான வீதியில் வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மியான்குளப் பகுதியில் காரொன்று வேகக்கட்டுப்பாட்டை மீறி வீதியை விட்டு விலகி, விபத்துக்குள்ளானதில் சம்பவ இடத்திலே இருவர் உயிரிழந்தனர். இச்சம்பவம், நேற்று இரவு 11.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது என வாழைச்சேனை பொலிசார் தெரிவித்துள்ளனர். மட்டக்களப்பைச் சேர்ந்த அதி சொகுசு தனியார் பஸ் வண்டி உரிமையாளரான பரமேஸ்வரன் தனுஜன் மற்றும் மாவடிவெம்பை பிறப்பிடமாகவும் தெஹிவளையை வசிப்பிடமாகக் கொண்டவருமான டினேகா என்பவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். அவ்விருவக்கும் 31 வயதாகும். கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்தபோதே இவ்வனர்த்தம் ஏற்பட்டுள்ளது எனத் தெரிவித்த வாழைச்சேனை போக்குவரத்து பொலிசார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தனர்.
Pfizer தடுப்பூசியை பயன்படுத்துவதற்கு அனுமதி-
இலங்கையில் Pfizerதடுப்பூசியை அவசரத்து பயன்படுத்துவதற்கு தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை அதிகாரசபை ஒப்புதல் அளித்துள்ளது.
புதிய கொரோனா சிகிச்சை நிலையம்-
கிளிநொச்சி மாவட்டத்தில் 230 கட்டில்களுடன் புதிதாக கொரோனா சிகிச்சை நிலையமொன்று இன்றுமுதல் தயார்ப்படுத்தப்படடுள்ளது. மலையாளபுரம் கிராமத்திலுள்ள இராணுவ வைத்தியசாலையே இப் புதிய கொரோனா சிகிச்சை நிலையமாக மாற்றப்பட்டுள்ளது. மேலும் இவ் வைத்தியசாலை கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தின் கீழ் செயற்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா உயிரிழப்பு மேலும் அதிகரிப்பு-
கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 11 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 745ஆக அதிகரித்துள்ளது.