மலர்வு – 1963.03.03 உதிர்வு – 2021.05.09

காரைதீவைப் பிறப்பிடமாகவும், வாழ்விடமாகவும் கொண்டவரும், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் ஆரம்பகால உறுப்பினரும், கட்சியின் உபதலைவர்களுள் ஒருவரும், கட்சியின் அம்பாறை மாவட்ட அமைப்பாளருமான (தோழர் பக்தன்) மகாதேவன் சிவநேசன் அவர்கள் கடும் சுகயீனம் காரணமாக இன்று(09/05/2021) காலமானதையிட்டு தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினராகிய (புளொட்) நாம் ஆழ்ந்த துயரடைகின்றோம்.

80களின் ஆரம்பத்தில் அம்பாறை மாவட்டத்தில் காந்தீயம் அமைப்பின் முக்கிய செயற்பாட்டாளராக மக்கள் மத்தியில் தொண்டாற்றிய தோழர் பக்தன், இயல்பிலேயே இனப்பற்றும் சமூகப்பற்றும் மிகுந்தவர்.

இளவயதிலேயே உரிமைகளுக்காகவும் அடக்குமுறைகளுக்கு எதிராகவும் போராட தன்னை அர்ப்பணித்திருந்தார். காந்தீயம் அமைப்பின் ஊடாக கழகத்திற்குள் உள்வாங்கப்பட்டு
அம்பாறை-மட்டக்களப்பு பிராந்தியத்தின் கழக பொறுப்பாளராக இருந்த இவர் துணிச்சலும், நேர்மையும், துடிப்பும் மிகுந்த தனது செயற்பாடுகளினால் தோழர்கள் மத்தியில் மிகுந்த மதிப்பையும் அன்பையும் பெற்றிருந்தார்.

சமூக மேம்பாட்டை நோக்கிய தனது அக்கறையும், அர்ப்பணிப்பும் உடனான செயற்பாடுகளினால் கிழக்கு மாகாண மக்களால் மிகவும் நேசிக்கப்பட்ட போராளியாக இருந்தார். அம்பாறை மட்டக்களப்பு பிராந்தியத்திற்கு பொறுப்பாக இருந்த காலப்பகுதியில் தோழர் பக்தன் இனவெறி இராணுவத்தை பலதடவைகள் ஆயுதரீதியாக முகங்கொண்டிருந்தார்.

கழகம் பல்வேறு இழப்புகளையும் சோதனைகளையும் எதிர்கொண்டபோதெல்லாம் துவண்டுவிடாது கொள்கையில் உறுதியுடனும் நம்பிக்கையுடனும் இறுதிவரை இயங்கினார்.

அன்னாரின் இழப்பு அவரது குடும்பத்திற்கு மாத்திரமல்ல எமது அமைப்புக்கும், எம் சமூகத்திற்கும் ஒரு பேரழிப்பாகும்.

அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினர், உறவினர் மற்றும் நண்பர்களோடு புளொட் அமைப்பினராகிய நாமும் இப்பெருந்துயரினை பகிர்ந்து கொள்வதோடு துயரந் தோய்ந்த எமது அஞ்சலியையும் சமர்ப்பிக்கின்றோம்.

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (PLOTE)
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (DPLF)

இன்று இரவு 8.30 மணிவரை 2,659 பேருக்கு கொரோனா தொற்று-

இலங்கையில் மேலும் 927 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப் பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணி உடன் தொடர்புடையவர்கள் என அவர் தெரிவித்தார். இதற்கமைய இன்று இதுவரையில் 2,659 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் இலங்கையில் இதுவரையில் 125,936 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதேவேளை, கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் மேலும் 1,365 பேர் இன்று பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதற்கமைய நாட்டில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களில் எண்ணிக்கை 104,463 ஆக அதிகரித்துள்ளது. மேலும் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் 786 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சீன ரொக்கட் விழுந்ததில் இலங்கைக்கு பாதிப்பில்லை-

கட்டுப்பாட்டை இழந்த சீன ரொக்கட்டானது இந்திய பெருங்கடலில் விழுந்துள்ளது. கடந்த சில நாள்களாக கட்டுப்பாட்டை இழந்து விண்வெளியில் மிதந்த 30 மீற்றர் நீளமான சீன ரொக்கட்டின் சில பாகங்கள், இன்று காலை 8.50 மணியளவில் இந்திய பெருங்கடலில் வீழ்ந்துள்ளதென, சீன ஊடகங்களை மேற்கோள் காட்டி, ரொய்டர் செய்தி வெளியிட்டுள்ளது. இந்தியப் பெருங்கடலின், மாலைத்தீவுக்கு வடக்கில் இது விழுந்துள்ளதென உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எனினும் குறித்த கடல் பரப்பில் இதுவரை சுனாமி எதுவும் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 21 தொன் நிறையுள்ள குறித்த ரொக்கட்டானது, 30 வருடங்களுக்குப் பிறகு விண்வெளியிலிருந்து பூமியில் விழுந்த மிகப்பெரிய கழிவென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயணக் கட்டுப்பாடுகளை விதிக்குமாறு ஜனாதிபதிக்கு கடிதம்-

கொரோனா தொற்று வேகமாகப் பரவி வரும் நிலையில், பயணக் கட்டுப்பாடுகளை விதிக்க நடவடிக்கை எடுக்காவிட்டால், எதிர்வரும் நாள்களில் பாரிய பாதிப்பை எதிர்கொள்ள நேரிடும் என, 4 வைத்திய சங்கங்கள் ஒன்றிணைந்து ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை வழங்கல் மற்றும் அவசர சிகிச்சை கட்டில்கள் என்பவற்றில் ஏற்கனவே தாமதங்கள் ஏற்பட்டுள்ளதால் எதிர்வரும் 3 வாரங்களுக்குள் கொரோனா மரணங்கள் அதிகரிக்கும் என அக்கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. எனவே, கொரோனா தொற்று அதிகரிப்பை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்காவிட்டால், அதற்கான செலவுகள் எதிர்காலத்தில் பாரியளவில் அதிகரிக்கும் என்றும் அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரச நிறுவனங்களுக்கு அதிரடி அறிவிப்பு-

அனைத்து அரச நிறுவனங்களிலும் குறைந்தபட்ச ஊழியர்களுடன் (கர்ப்பிணித் தாய்மார்களைத் தவிர) அத்தியாவசிய சேவைகளை மட்டுமே முன்னெடுக்குமாறு பொது நிர்வாக அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.

 

900,000 தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ள உடன்படிக்கை கைச்சாத்து-

எதிர்வரும் ஜுலை மாதத்தில் 900, 000 பைஸர் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ள அமெரிக்காவின் பைஸர் நிறுவனத்துடன் அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனம் உடன்படிக்கையொன்றை கைச்சாத்திட்டுள்ளது. அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் தலைவர் வைத்தியர் பிரசன்ன குணசேன இதனை தெரிவித்துள்ளார். இதேவேளை, மேலும் 4.9 மில்லியன் பைஸர் தடுப்பூசிகளை எதிர்வரும் ஒக்டோபரில் பெற்றுக்கொள்ள எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

க.பொது.சா/த மாணவர்களுக்காக விசேட கல்வி ஒலிபரப்புச் சேவை-

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன மலையக சேவையுடன் இணைந்து மத்திய மகாண கல்வித் திணைக்களம் நடத்தும் க.பொ.த.சாதாரணதர மாணவர்களுக்கான விசேட கல்வி ஒலிபரப்புச் சேவை, இம்மாதம் 15ஆம் திகதி முதல் தினமும் மாலை 6.30 மணிமுதல் 7.30 மணிவரையில் இடம்பெறவுள்ளது. ‘குறிஞ்சி குருகுலம்’ என்ற பெயரில் 90.1,107.3,107.5 ஆகிய அலைவரிசைகளில் இந்நிகழ்ச்சியைக் கேட்டு மாணவர்கள் பயன்பெறலாம் என மத்திய மாகாண உதவிக் கல்விப் பணிப்பாளர் பெரியதம்பி விக்னேஸ்வரன் தெரிவித்தார். இவ் வானொலி நிகழ்ச்சியைக் கேட்டு மாணவர்கள் பயன்பெறுவதற்கான வழிகாட்டல்களை ஆசிரியர்களும் அதிபர்களும் சமூகநலன் விரும்பிகளும் சமூகப்பொறுப்பு மிக்கவர்களும் மேற்கொள்ள வேண்டுமென அவர் மேலும் தெரிவித்தார். கபொ.த.சாதாரன பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்கான சகல பாடங்களுக்குமான வழிகாட்டல்கள், துறைசார் நிபுணத்துவம் பெற்றவர்களால் வழங்கப்படவுள்ளன.