அரசாங்கத்தால் விடுக்கப்பட்டிருக்கும் அறிவுறுத்தலின் பிரகாரம், மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடை, இன்று நள்ளிரவு 12 மணிமுதல் அமுலாகும் என இராணுவம் அறிவித்துள்ளது. எனினும், இந்த கட்டுப்பாடுகள் அத்தியாவசிய சேவைகளுக்குப் பொருந்தாது. இதேவேளை இன்று நள்ளிரவு முதல் நாட்டின் அனைத்து மாகாண எல்லைகளிலும் விசேட வீதித் தடை ஏற்படுத்தப்படும் என, பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறியதுடன், ஒவ்வொரு மாகாண எல்லையிலும் முப்படையினர் மற்றும் விசேட அதிரடிப்படியினர் இணைந்து வீதித்தடைகளை அமைப்பார்கள் என்றும் அவர் கூறியுள்ளார். சுற்றுலாப் பயணம், குடும்பப் பயணங்கள் அல்லது வார இறுதி நாட்களில் ஒரு மாகாணத்திலிருந்து இன்னொரு மாகாணத்திற்கு பயணிப்பது தடைசெய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, அனைத்து பொலிஸ் அதிகாரிகளின் விடுமுறைகள் இன்று நள்ளிரவு முதல் 31 ஆம் திகதி வரை இரத்து செய்யப்பட்டுள்ளதாக அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

கொரிய தூதுவர், சட்டமா அதிபர் கலந்துரையாடல்-

கொரிய தூதுவர் சந்தூஸ் வூன்ஜின் ஜியோக் மற்றும் சட்டமா அதிபருக்கு இடையில் இன்று கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதன்போது, இரு நாடுகளுக்கும் இடையிலான சட்ட நிறுவனங்களை மேம்படுத்துவது மற்றும் உதவிகளை அதிகரிப்பது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளன. சட்டமா அதிபரின் ஒருங்கிணைப்பு அதிகாரி அரச சட்டத்தரணி நிஷாரா ஜயரத்ன இதனை தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகளை வாசிக்க இங்கே அழுத்தவும்…. Read more