அரசாங்கத்தால் விடுக்கப்பட்டிருக்கும் அறிவுறுத்தலின் பிரகாரம், மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடை, இன்று நள்ளிரவு 12 மணிமுதல் அமுலாகும் என இராணுவம் அறிவித்துள்ளது. எனினும், இந்த கட்டுப்பாடுகள் அத்தியாவசிய சேவைகளுக்குப் பொருந்தாது. இதேவேளை இன்று நள்ளிரவு முதல் நாட்டின் அனைத்து மாகாண எல்லைகளிலும் விசேட வீதித் தடை ஏற்படுத்தப்படும் என, பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறியதுடன், ஒவ்வொரு மாகாண எல்லையிலும் முப்படையினர் மற்றும் விசேட அதிரடிப்படியினர் இணைந்து வீதித்தடைகளை அமைப்பார்கள் என்றும் அவர் கூறியுள்ளார். சுற்றுலாப் பயணம், குடும்பப் பயணங்கள் அல்லது வார இறுதி நாட்களில் ஒரு மாகாணத்திலிருந்து இன்னொரு மாகாணத்திற்கு பயணிப்பது தடைசெய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, அனைத்து பொலிஸ் அதிகாரிகளின் விடுமுறைகள் இன்று நள்ளிரவு முதல் 31 ஆம் திகதி வரை இரத்து செய்யப்பட்டுள்ளதாக அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

கொரிய தூதுவர், சட்டமா அதிபர் கலந்துரையாடல்-

கொரிய தூதுவர் சந்தூஸ் வூன்ஜின் ஜியோக் மற்றும் சட்டமா அதிபருக்கு இடையில் இன்று கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதன்போது, இரு நாடுகளுக்கும் இடையிலான சட்ட நிறுவனங்களை மேம்படுத்துவது மற்றும் உதவிகளை அதிகரிப்பது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளன. சட்டமா அதிபரின் ஒருங்கிணைப்பு அதிகாரி அரச சட்டத்தரணி நிஷாரா ஜயரத்ன இதனை தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகளை வாசிக்க இங்கே அழுத்தவும்….

தங்குமிடம் வழங்குவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை-

இன்று நள்ளிரவு முதல் எதிர்வரும் 31ஆம் திகதி வரையான காலப்பகுதியில் வெளிமாகாணங்களில் இருந்து வரும் நபர்களுக்கு தங்குமிட வசதிகளை ஏற்படுத்தி கொடுப்போருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை ஊடக பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார். காவல்துறை தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனை தெரிவித்தார். மேலும் வெளிமாகாணங்களில் இருந்து வந்து விடுதிகளில் தங்கியிருப்பதை முற்றாக தவிர்த்துக்கொள்ளுமாறு காவல்துறையினர் பொது மக்களிடம் கோரியுள்ளனர்.

திருகோணமலையிலும் பிரித்தானிய வைரஸ் தொற்று-

பிரித்தானியாவில் பரவும் டீ.1.1.7 என்ற உரு திரிபடைந்த கொரோனா வைரஸ் திருகோணமலையிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக திருகோணமலை பிராந்திய பிரதிச் சுகாதார சேவைகள் பணிப்பாளர் வீ.பிரேமானந் தெரிவித்தார். திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணியகத்தில் இன்று (11) நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே, அவர் இதனைத் தெரிவித்தார். கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் கந்தளாய், சீனக்குடா மற்றும் உப்புவெளி பிரதேசங்களில் பி.சி.ஆர் பரிசோதனைகளுக்கான மாதிரிகளைப் பெற்று, அதனை கொழும்பு ஸ்ரீ ஜயவர்தனபுர ஆய்வு கூடத்துக்கு திருகோணமலை தொற்றுநோயியல் பிரிவு அனுப்பி வைத்துள்ள நிலையில், இந்த வைரஸ் உறுதி செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். திருகோணமலை மாவட்டத்தில் கடந்த மே மாதம் முதலாம் திகதி தொடக்கம் இன்று வரை 520 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

கடந்த 24 மணித்தியாலத்துக்குள் 42 தொற்றாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை 1,961 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அத்துடன், இதுவரை 20 மரணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பிரதிச் சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்தார்.

அதேவேளை, திருகோணமலை மாவட்டத்தில் மூன்று வைத்தியசாலைகளிலும் 240 கட்டில்கள் தயார் நிலையில் உள்ளதாகவும் நோயாளர்கள் அதிகரிக்கும் பட்சத்தில் மேலும் மூன்று வைத்தியசாலைகளைத் தெரிவுசெய்து வைத்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 1,225 பேர், இன்று இனங்காணப்பட்டுள்ளனர். முதல் சுற்று பி.சி.ஆர் பரிசோதனைகளின் அறிக்கையின் பிரகாரமே இவர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.