அடையாள அட்டை எண்ணின் அடிப்படையில் வீட்டிலிருந்து வெளியேறும் முறை-
பயணக் கட்டுப்பாடு விதிக்கப்படாத சந்தர்ப்பங்களில் அத்தியாவசிய தேவைகளுக்காக வீட்டில் இருந்து வெளியேறும் நபர்களுக்கு தேசிய அடையாள அட்டையின் இலக்கங்களை அடிப்படையாக கொண்டு அனுமதி வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நாட்டில் நாளை (13) முதல் அமுல்ப்படுத்தப்படவுள்ள பயணக் கட்டுப்பாடு தொடர்பில் விளக்கமளிக்கும் ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட பொலிஸ் ஊடக பேச்சாளரும், பிரதி பொலிஸ்மா அதிபருமாகிய அஜித் ரோஹண இதனை தெரிவித்தார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், அடையாள அட்டை இல்லாத பட்சத்தில் கடவுச்சீட்டு அல்லது சாரதி அனுமதி பத்திரத்தை பயன்படுத்த முடியும். இதன் காரணமாக தொழிலுக்காக அல்லது வேறு அத்தியாவசிய தேவைக்காக வீட்டில் இருந்து வெளியேறும் போது அனைத்து பொதுமக்களும் அடையாள அட்டையை எடுத்துச் செல்வது கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது. ´உதாரணமாக இன்று மே மாதம் 12 ஆம் திகதி. இன்றைய தினத்தில் அடையாள அட்டையின் இறுதி இலக்கங்கள் 2,4,6 அல்லது 8 ஆக இருக்கும் நபர்களுக்கு மாத்திரமே வீட்டில் இருந்து வெளியேற முடியும். நாளை 13 ஆம் திகதி அடையாள அட்டையின் இறுதி இலக்கங்கள் 1,3,5,7 அல்லது 9 ஆக இருக்கும் நபர்களுக்கு மாத்திரம் பயணிக்க முடியும். 0 இருக்கும் போது அது இரட்டை எண்ணாக கருதப்படும். அதன்படி, இரட்டை எண்ணுக்கு உரிய தினத்தில் பயணிக்க முடியும்´ என்று தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகளை வாசிக்க இங்கே அழுத்தவும்….

நாடளாவிய ரீதியில் புதிய கட்டுப்பாடு-

நாடு முழுவதிலும் நாளை இரவு 11 மணிமுதல் எதிர்வரும் 17ஆம் திகதி அதிகாலை 4 மணி வரையில் தொடர்ச்சியாக நடமாட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்படவுள்ளன. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இராணுவத்தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். எனினும், அத்தியாவசிய சேவைகள் மற்றும் உணவுப்பொருள் விநியோக நடவடிக்கைகளுக்கு தடை விதிக்கப்படவில்லை. இதேவேளை, எதிர்வரும் 17ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் நாளாந்தம் இரவு 11 மணிமுதல் அதிகாலை 4 மணி வரையிலும் பயணக்கட்டுப்பாடு அமுலில் இருக்கும். முன்னதாக இன்று முதல் நாளாந்தம் இரவு 11 மணிமுதல் அதிகாலை 4 மணி வரையிலும் பயணக்கட்டுப்பாடு அமுலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டது. பின்னர் அந்த தீர்மானம் மாற்றிக்கொள்ளப்பட்டுள்ளது.

கொழும்பில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரிப்பு-

இன்று (12) காலை நிலவரப்படி, கடந்த 24 மணி நேரத்தில் மொத்தம் 2,568 நபர்களுக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கொவிட் பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இவர்களில் அதிகமான தொற்றாளர்கள் கொழும்பில் பதிவாகியுள்ளனர். அதன்படி, கொழும்பு மாவட்டத்தில் மாத்திரம் 606 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கமைய, கொள்ளுப்பிட்டியில் 14 பேரும், நாரஹேன்பிடவில் 18 பேரும், பொரளையில் 10 பேரும், கொழும்பு நகர எல்லையில் 53 பேரும், அவிசாவளையில் 22 பேரும், பம்பலப்பிட்டியில் 14 பேரும், பொரலஸ்கமவில் 19 பேரும், கொதடுவையில் 29 பேரும், ஹோமாகமவில் 15 பேரும், கொட்டாவையில் 30 பேரும், பிலியந்தலையில் 36 பேரும், தலங்கமையில் 19 பேரும், வெலிகடையில் 18 பேரும் மற்றும் வெல்லம்பிடியில் 19 பேரும் இவ்வாறு பதிவாகியுள்ளனர்.

இதேவேளை, 300 பேர் கம்பஹா மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது. அவர்களில், தொம்பே பிரதேசத்தில் 22 பேரும், துன்கல்பிடிய பிரதேசத்தில் 24 பேரும், ஜா-எல பிரதேசத்தில் 31 பேரும், கட்டானை பிரதேசத்தில் 18 பேரும், கட்டுநாயக்க பிரதேசத்தில் 62 பேரும், கொச்சிகடை பிரதேசத்தில் 15 பேரும், மினுவங்கொடை பிரதேசத்தில் 13 பேரும், நீர்க்கொழும்பு பிரதேசத்தில் 35 பேரும் மற்றும் நிட்டம்புவ பிரதேசத்தில் 11 பேரும் பதிவாகியுள்ளனர். இதேபோல் களுத்துறை மாவட்டத்தில் இருந்து 417 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

மேலும், குருநாகலை மாவட்டத்தில் 196 தொற்றாளர்களும், காலி மாவட்டத்தில் 148 தொற்றாளர்களும், மாத்தளை மாவட்டத்தில் 108 தொற்றாளர்களும், மற்றும் கண்டி மாவட்டத்தில் 110 தொற்றாளர்களும் பதிவாகியுள்ளதாக கொவிட் பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

வவுனியா வைத்தியர், தாதியர்களுக்கு கொரோனா தொற்று, கற்பகபுரத்தில் தொற்றுக்கு ஒருவர் பலி-

வவுனியா வைத்தியசாலையில் கடமைபுரியும் வைத்தியர்கள் மற்றும் தாதிய உத்தியோகத்தர்கள் நால்வருக்கு, கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. வவுனியா வைத்தியசாலையின் நோயாளர் விடுதியில் கடமைபுரியும் வைத்தியர்கள் மற்றும் தாதிய உத்தியோகத்தர்களுக்கு பிசிஆர் பரிசோதனைக்கான மாதிரிகள் பெறப்பட்டது. பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் அவர்களுக்கு தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இதேவேளை, குறித்த வைத்தியர்களுடன் தொடர்புகளை பேணியவர்கள் தனிமைப்படுத்தப்படவுள்ளதுடன், தொற்றுறுதியானவர்களை கொரோனா வைத்தியசாலைக்கு மாற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை வவுனியா கற்பகபுரம் பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் கொரோனாத் தொற்றினால் மரணமடைந்துள்ளார். கற்பகபுரம் பகுதியில் 9 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது அண்மையில் உறுதிசெய்யப்பட்டது. இந்நிலையில் தொற்றுறுதியான நபர்கள் கிளிநொச்சி கொரோனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர்களில் 49 வயதான நபரொருவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.

வெளிநாடுகளில் இருந்து வருபவர்களுக்கு 14 நாட்கள் தனிமைப்படுத்தல்-

வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு வருகை தரும் இலங்கையர்கள் உட்பட அனைவரும் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. புதிய சுகாதார வழிகாட்டலின் அடிப்படையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.