கொழும்பு துறைமுகத்துக்கு அருகில் நங்கூரமிடப்பட்டிருந்த நிலையில், தீப்பற்றி எரியும் எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் தொடர்பில், நெதர்லாந்து விசேட நிபுணர்கள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

நேற்று (22) இரவு குறித்த நிபுணர்கள் குழு இலங்கைக்கு வருகைத் தந்ததாகவும் தற்போது, இவர்கள் கப்பலுக்குச் சென்று விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் கடற் சுற்றாடல் பாதுகாப்பு அதிகாரசபையின் தலைவர் தர்சனி லஹந்தபுர தெரிவித்துள்ளார்.

கப்பல் தீப்பற்றியதால் சுற்றாடலுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பது தொடர்பில் ஆராய, சம்பவ இடத்தில் பெற்றுக்கொண்ட மாதிரிகளை இரசாயன பகுப்பாய்வுக்கு அனுப்பியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை கப்பலில் ஏற்பட்ட தீபரவல், இன்னும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படவில்லை என்றும், தீயைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் கடற்படை, விமானப்படை மற்றும் துறைமுக அதிகார சபையினர் இணைந்து செயற்பட்டு வருவதாகவும் கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.