இலங்கைக் கடற்பரப்பில் விபத்துக்குள்ளாகி தீப்பற்றியிருக்கும் “எம்.வீ. எக்ஸ்பிரஸ் பேர்ல்” கப்பலானது இரண்டாகப் பிளவுப்படும் அபாயம் இல்லையெனத் தெரிவித்த கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிசாந்த உளுகேதென்ன,

இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்க இந்தியவின் கரையோரப் பாதுகாப்பு அணியின் இரண்டு கப்பல்கள் வந்துள்ளன என்றார்.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று (28) நடைபெற்ற ஊடகவியலாளர்
சந்திப்பிலேயே, அவர் இதனைத் தெரிவித்தார்.

“தீப்பற்றிய கப்பலிலிருந்து எண்ணைய் கசிவு ஏற்பட்டால், கசிவு ஏற்பட்டவுடன்
அதற்குத் தேவையான அவசர நடவடிக்கைகளை இதன்மூலம் முன்னெடுக்க
முடியும்” என்றார்.

பெரும்பாலும் கப்பலில் ஏற்பட்ட தீயை மிகவும் வெற்றிகரமாக அணைத்து
வருவதாகவும் இதற்காக இலங்கைக் கடற்படையால் பயன்படுத்தக் கூடிய பாரிய
டோரா படகு மற்றும் மேலும் பல படகுகளும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன என்றார்.

அத்துடன், இந்தியக் கடலோரப் பாதுகாப்பு படைக்கு, எண்ணெய்க் கசிவு
தொடர்பான நடவடிக்கையை முன்னெடுப்பதற்கான விசேட நிபுணத்துவம்
உள்ளதால் எண்ணெய் கசிவு ஏற்பட்டால் அவர்களின் ஒத்துழைப்புக்
கண்டிப்பாகக் கிடைக்கும் என்றார்.

கப்பலின் பின்புறத்தில் தீ பரவுவதை நேற்று முன்தினம் (27) மாலை
அவதானிக்க முடிந்தது. கப்பலின் நடுப்பகுதியில் வெறும் புகைமூட்டம்
மாத்திரம் காணப்பட்டது. சீரற்ற வானிலை காரணமாகவே தீ வெகுவாக
பரவலடைந்தது.

ஆகவே,  தற்போது  தீ ஓரளவுக்குக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ஆகவே,  கப்பல் இரண்டாக பிளவடைந்து கடலுக்குள்  மூழ்கும் அபாயத்தைக்
கடந்துள்ளது.

இதேவேளை கொழும்புத் துறைமுகத்துக்கு அருகில் வியாழக்கிமை (20) தீப்பற்றி எரிந்த, “எம்.வீ. எக்ஸ் பிரஸ் பேர்ல்” கப்பல் கடல் மற்றும் கடற்சுற்றாடலுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளுக்கு, பொறுப்புக் கூற வேண்டியவர்கள் தொடர்பில், எதிர்வரும் நாள்களில் முழுமையான விசாரணைகளை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த நகர அபிவிருத்தி, கடலோரப் பாதுகாப்பு கழிவுகள் அகற்றல் இராஜாங்க அமைச்சர் நாலக கொடஹேவா, குறித்த கப்பல் விபத்தை சந்திக்கும் முன்னர், இரண்டு நாடுகளின் துறைமுகங்களில் நுழைவதற்கு அனுமதி கோரியுள்ள தகவல்களை நிராகரிப்பதாகத் தெரிவித்தார்.