20 ஆம் நூற்றாண்டின் “தமிழ் கலாசார இனப்படுகொலை” என்று கூறப்படும் யாழ்ப்பாணம் பொது நூலகம் எரிக்கப்பட்ட 40ஆவது ஆண்டு நினைவுதினம், இன்றாகும்.

1981ம் ஆண்டு ஜூன்மாதம் 01ம்திகதி யாழ் நூலகம் எரிக்கப்பட்ட செய்தி கேட்டு யாழ். நடமாடும் நூலகம் என போற்றப்பட்டு வந்த பன்மொழிப் புலவர் தாவிது அடிகளார் மாரடைப்பால் மரணமானார்.

தென்னாசியாவிலேயே மிகவும் பெரியதும் 98,000ற்கும் அதிகமான புத்தகங்களையும், தேடற்கரிய கையெழுத்து பிரதிகளை உடையதுமான யாழ். பொதுநூலகம் மனிதகுலத்திற்கே விரோதமான ஒரு குற்றச்செயலாகவும், பண்பாட்டுப் படுகொலையாகவும் தீயிட்டு கொளுத்தப்பட்டது.

இந்நிகழ்வு ஈழத் தமிழ் மக்களை மாத்திரமின்றி உலகத்தையே பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. 20ஆம் நூற்றாண்டின் இன, நூலழிப்புகளில் ஒரு மிகப்பெரும் வன்முறையாகவும் இது கருதப்படுகிறது.

1996ம் ஆண்டின் பிற்பகுதியில் யாழ். நூல்நிலையத்தை மறுநிர்மாணம் செய்யும் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

இதனைத் தொடர்ந்து எமது அமைப்பும், சில தமிழ்க் கட்சிகளின் பிரதிநிதிகளும், தமிழ் அரசியல் பிரமுகர்களும் இப்பணிகளில் முனைப்புடன் ஈடுபட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.

யாழ். பொது நூலகத்தை மறுநிர்மாணம் செய்வதற்கு பாடுபட்டவர்கள் அனைவரும் என்றும் நினைவுகூரப்பட வேண்டியவர்களே.