கடலில்  மூழ்கிக்கொண்டிருக்கும் X-Press Pearl கப்பலின் கருப்புப் பெட்டி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடற்படையினர் முன்னெடுத்த விசேட தேடுதலின் போது கண்டுபிடிக்கப்பட்ட கருப்புப் பெட்டி, மேலதிக விசாரணைகளுக்காக குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.குற்றப்புலனாய்வு திணைக்களத்திடமுள்ள கருப்பு பெட்டி, நீதிமன்றத்தின் அனுமதியுடன் இரண்டு நாட்களில் அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, கப்பலிலுள்ள எரிபொருள் தொடர்பில் அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு கடல் மாசுறல் தடுப்பு அதிகார சபை, கப்பல் மீட்பு நிறுவனத்தின் கெப்டனுக்கு அறிவுறுத்தியுள்ளது.

மூழ்கிக்கொண்டிருக்கும் கப்பலினால் கடல், சுற்றுச்சூழல், கரை உள்ளிட்ட பகுதிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் நடவடிக்கைகைள முன்னெடுக்குமாறு அறிவித்துள்ளதாகவும் கடல் மாசுறல் தடுப்பு அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.

கப்பலிலிருந்து கரையொதுங்கிய சிதைவுகளுடன் கூடிய சுமார் 40 கொள்கலன்கள் மேலதிக சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக சுற்றாடல் அமைச்சு தெரிவித்துள்ளது.

இதனிடையே அண்மையில் கரையொதுங்கிய ஆமை, X-Press Pearl கப்பலிலிருந்து வௌியேறிய இரசாயனம் காரணமாகவா உயிரிழந்தது என்பது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக கடல் மாசுறுல் தடுப்பு அதிகார சபை கூறியுள்ளது.

இதற்காக உயிரிழந்த ஆமையின் மாதிரிகள் பேராதனை மிருக வைத்திய பீடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன.