யாழ் உரும்பிராயைப் பிறப்பிடமாகவும் கனடாவை வதிவிடமாகவும் கொண்டவரும், கழகத்தின் ஆரம்பகால உறுப்பினருமான தோழர் ராசா (முருகேசு சத்தியநாதன்) அவர்கள் இன்று கனடாவில் இடம்பெற்ற விபத்தொன்றில் அகால மரணமான செய்தி கேட்டு ஆழ்ந்த துயரடைகின்றோம்.

இவர் கழகத்தின் உரும்பிராய் பிரதேச அமைப்பாளராக இருந்த காலங்களில், கழகத்தின் இராணுவ செயற்பாடுகளில் மாத்திரமன்றி வெகுஜன அமைப்புகளை உருவாக்குவதிலும் அவற்றை பலப்படுத்துவதிலும் கடுமையாக உழைத்தார்.

செயலதிபர் மீது மிகுந்த பற்றும் விசுவாசமும் கொண்ட இவர் எந்நேரமும் எளிமையாகவே தோற்றமளிப்பார். தோழர்களுக்கு அரசியல் வகுப்புகளை நடத்தி அவர்களை அரசியல் ரீதியில் வளர்த்தெடுப்பதிலும் மிகுந்த அக்கறை காட்டினார்.

புலிகளின் நடவடிக்கைகளால் கழகம் தனது செயற்பாடுகளை தளத்தில் தற்காலிகமாக நிறுத்தும்வரை கழக செயற்பாடுகளில் தன்னை மிகத்தீவிரமாக ஈடுபடுத்தியிருந்தார்.

இவரது சகோதரர் 1988ஆம் ஆண்டில் புலிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். அப்போதுகூட துவண்டு விடாமல் ஏனைய தோழர்களை அவர் பாதுகாத்து நின்றதை துயர்மிகு இத்தருணத்தில் நினைவு கூருகின்றோம்.

பின்னர் அவர் கனடா சென்று வாழ்ந்தபோதும் போரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முடிந்த உதவிகளை செய்யவேண்டுமென்பதிலும் எதிர்கால தலைமுறையினரின் கல்வியறிவை மேம்படுத்த வேண்டுமென்பதிலும் கவனம் செலுத்தியிருந்தார்.

அவரது திடீர் இழப்பு அவரது குடும்பத்திற்கு மாத்திரமல்ல எமது சமுகத்திற்கும் ஒரு பேரிழப்பாகும்.

அவரது பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் நாமும் இப் பெருந்துயரைப் பகிர்ந்து கொள்வதோடு துயரந் தோய்ந்த எமது அஞ்சலியையும் சமர்ப்பிக்கிறோம்.

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்(PLOTE)
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(DPLF)
18.06.2021.