யாழ்ப்பாணம் –  வடமராட்சி, முள்ளி பகுதியில், சுமார் 230 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்ட சேதனக் குப்பைகளை இயற்கை உரமாக மாற்றும் தொழிற்சாலை, இன்று (27) மாலை 4 மணியளவில் அமைச்சர் நாமல் ராஜபக்ஷவால் திறந்து வைக்கப்பட்டது.

கரவெட்டி பிரதேச சபை தவிசாளர் ஐங்கரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, இராஜாங்க அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களான அங்கஜன் இராமநாதன், எம்.ஏ.சுமந்திரன் மற்றும் தர்மலிங்கம் சித்தார்த்தன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

ஜப்பான் நாட்டின் ஜெய்க்கா நிறுவனத்தின் உதவி மூலம் நிர்மாணிக்கப்பட்ட இந்த தொழிற்சாலையில், நாளொன்றுக்கு ஐம்பதாயிரம் கிலோ கிராம் உரத்தை உற்பத்தி செய்ய முடியுமென தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன், கரவெட்டி பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட இந்த தொழிற்சாலை மூலம், அருகிலுள்ள பிரதேச சபைகளின் குப்பை பிரச்சினைகளுக்கும் தீர்வு காண முடியுமென எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிகழ்வைத் தொடர்ந்து, அரசியல் கைதியான ஆனந்த சுதாகரின் பிள்ளைகள் அமைச்சர் நாமல் ராஜபக்ஷவை சந்தித்தனர்.

இதன்போது, தமது தந்தையை விடுதலை செய்யுமாறு, ஆனந்த சுதாகரின் மகன் கவிரதன், மகள் சங்கீதா ஆகியோர், அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தனர்.

இதேவேளை அரசியல் கைதிகளின் உறவுகளும் அண்மையில் விடுதலையான அரசியல் கைதிகளும், அமைச்சர் நாமல் ராஜபக்ஷவை சந்தித்தமை குறிப்பிடத்தக்கது.