முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கள்ளப்பாடு வடக்கு பகுதியில் நேற்றிரவு (27) வீடு புகுந்த சுமார் 7 பேர் கொண்ட கும்பல் ஒன்று வீட்டில் இருந்தவர்கள் மீது வாளால் வெட்டியுள்ளதுடன் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களின் மீதும் தாக்குதல் நடத்தி சேதப்படுத்தியுள்ளதுடன் வாகன ஒன்றுக்கு தீ வைத்துள்ளார்கள்.

கள்ளப்பாட்டில் வசித்து வரும் குடும்பம் ஒன்றின் வீட்டிற்குள் மதிலேறி குதித்து சென்ற இனம் தெரியாத நபர்கள் வீட்டில் இருந்தவர்கள் மீது சரமாரியாக வாள்வெட்டு தாக்குதல் நடத்தியுள்ளதுடன் வீட்டில் நின்ற வாகனத்தின் மீதும் தாக்குதல் நடத்தி சேதப்படுத்தியுள்ளனர்.

பின்னர் சுமார் 60 இலட்சத்துக்கும் அதிகமான பெறுமதியுடைய சொகுசு காருக்கு தீ வைத்து விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

இதன் போது KDH ரக வாகனம் ஒன்று சேதமடைந்துள்ளது அத்தோடு சொகுசு கார் ஒன்று முற்றாக எரிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது வீட்டில் இருந்த ஒருவர் வாள் வெட்டிற்கு இலக்கான நிலையில் காயமடைந்து முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் குறித்து பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற முல்லைத்தீவு பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றார்கள்.

அத்தோடு இன்று (28) காலை குறித்த இடத்துக்கு சென்ற முல்லைத்தீவு பொலிசார், தடயவியல் பொலிசார் மற்றும் விசேட அதிரடிப் படையினர் ஆகியோர் விசாரணைகளை நடத்தியதோடு வீட்டில் இருந்த சிசிரிவி காணொளி ஆதாரங்களுடன் குறித்த செயற்பாட்டில் ஈடுபட்டவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

குறித்த தாக்குதலை நடத்திய குழுவினரால் வீட்டில் இருந்த சிசிரிவி கெமராக்கள் இரண்டும் சேதமாக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

குறித்த நடவடிக்கையினால் சுமார் ஒரு கோடியே நாற்பத்தைந்து இலட்சம் ரூபாய் வரையான சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கும் குடும்பத்தினர் தாம் வீட்டில் வாழ முடியாத அச்ச சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துமாறும் கோரியுள்ளனர்.