உள்ளுராட்சி சபைகளுக்கான புதிய உறுப்பினர்கள் 59 பேர், நாளை(29) பதவியேற்கவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.
கடந்த 2018ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளூராட்சி சபை தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற உறுப்பினர்கள் 59 பேர் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து கொண்டனர்.
ஐக்கிய தேசியக் கட்சியின் அறிவிப்பினையடுத்து, அவர்களின் பதவிகளை இரத்துச் செய்து தேர்தல்கள் ஆணைக்குழுவினால் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டது.
அதனையடுத்து, குறித்த 59 பேர் தமது உள்ளூராட்சி உறுப்பினர் பதவியில் இருந்து அண்மையில் நீக்கப்பட்டதுடன், ஐக்கிய தேசியக் கட்சி, அந்த இடங்களுக்கு புதிய உறுப்பினர்களை நியமித்துள்ளது.
இந்த நிலையில், கட்சித் தலைமையகமான சிறிகொத்தவில் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் அவர்கள் நாளை சத்தியப்பிரமாணம் செய்துகொள்ளவுள்ளனர்.
அதன் பின்னர் தமது உள்ளூராட்சி சபைகளில் அவர்கள் பதவியேற்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநகர சபைகள், நகர சபைகள் மற்றும் பிரதேச சபைகளில் வெற்றிடமாகியுள்ள 59 இடங்களுக்கு புதிய உறுப்பினர்கள் பதவியேற்கவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி மேலும் தெரிவித்துள்ளது.