முள்ளிவாய்க்கால் நினைவுநாளை நினைவேந்தினர் என்ற குற்றச்சாட்டின் கீழ்  மட்டக்களப்பு – கல்குடா பகுதியில் வைத்து சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட பத்து பேர் தொடர்பான சமர்ப்பணங்களை எதிர்வரும் 13ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

வாழைச்சேனை நீதவான் நீதிமன்றத்தில்  நீதவான் எம்.எச்.எம். பசீல் முன்னிலையில் இந்த வழக்கு நேற்று (30) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போதே  மேற்கண்டவாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை  வாகனங்கள் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதால்  அடையாளங்களை உறுதிப்படுத்தியதன் பின்னர் சந்தேகநபர்களின் உறவினர்கள் வாகனங்களைக் கொண்டு செல்ல முடியும் என நீதவான் அறிவித்துள்ளார்.

இந்நிலையில் சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை எதிர்வரும் 13ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும்  கொரோனா தொற்று அபாயம் காரணமாக சந்தேகநபர்கள் எவரும் நீதவான் முன்னிலையில் நேற்று (30) ஆஜர்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.